1940-கள் தொடக்கத்தில் லீவர் நிறுவனம் தனது பொருள்களை விநியோகம் செய்ய இடைத்தரகர்கள் வேண்டாம் என்று கூறவே அதுவரை அதன் பொருள்களை விற்பனை செய்துவந்த டி.டி.கே நிறுவனம் இறங்குமுகத்தில் சென்றது.
பின்னர், 1946-வாக்கில் அமெரிக்காவின் ஹென்றி ஷெமூர் அண்ட் வி.ஏ.டாட்ஜ் நிறுவனத்தின் பொருள்களை விநியோகம் செய்யும் ஏஜெண்டாக டி.டி.கே நிறுவனம் மாற நிலைமை கொஞ்சம் சீரானது.
சுதந்திரத்துக்குப் பின் நேரு அமைச்சரவையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக கிருஷ்ணமாச்சாரி பதவி வகித்தபோது, 1952-ல் பொருள்களின் இறக்குமதி தடைசெய்யப்படவே, டி.டி.கே நிறுவனம் விநியோகம் செய்துவந்த பொருள்களின் விநியோகம் பாதித்தது.

கிருஷ்ணமாச்சாரி தொழில்துறை அமைச்சராக இருந்ததாலே நரசிம்மனால் பிசினஸ் தொடர்பாகச் செல்ல முடியாமல் போனது. 1958-க்குப் பிறகு இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்த பொருள்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார்.
பால்பாயின்ட் பேனா, மேப், அட்லாஸ் உட்பட ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கியது டி.டி.கே குரூப் நிறுவனம். ஆனால், உற்பத்திச் செலவால் கடன் சுமையும் அதிகரித்தது.
அப்போது, சென்னை ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் கோல்டு மெடல் வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நரசிம்மனின் மகன் டி.டி. ஜெகநாதன், உடனடியாக சென்னை வந்து தந்தைக்கு உதவும் வகையில் நிர்வாகப் பொறுப்பில் ஈடுபட்டார்.