இப்போது அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது பேஷனாகிவிட்டது. வீட்டிற்கு அருகில் கடை இருந்தாலும் அங்கு செல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்குவது வழக்கமாகிவிட்டது. இதில் சாப்பாடும் தப்பவில்லை. உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்கள் காலையிலே உணவு டெலிவரி செய்வதில் பிஸியாகி விடுகின்றனர். ஸ்விக்கி நிறுவனத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிக அளவு எந்த மாதிரியான உணவு ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்த விவரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் நடப்பு ஆண்டில் ரூ.42.3 லட்சத்திற்கு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் 6 லட்சம் ரூபாய்க்கு இட்லியை மட்டும் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். ஜான்சியில் நடந்த ஒரு பார்ட்டிக்கு ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 269 உணவுப்பொருள்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. புவனேஷ்வரைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் 207 பிட்சா ஆர்டர் செய்துள்ளார்.
துர்கா பூஜையின் போது 7.7 மில்லியன் குலாப் ஜாமுன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நவராத்தியின் போது 9 நாள்களும் மசாலா தோசை அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இந்த ஆண்டு மட்டும் 8.5 மில்லியன் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேக்குகளின் தலைநகரம் என்று அதைக் குறிப்பிடுகிறது ஸ்விக்கி. காதலர் தினத்தன்று நாட்டில் நிமிடத்திற்கு 271 கேக் ஆர்டர் செய்யப்பட்டது. உணவுப்பொருள் ஆர்டரில் பிரியாணியும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டில் ஒரு விநாடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.