சர்வதேச விருதுகள்:
2018 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற பெருமைக்குரியவர்.
இந்த விருதை இரண்டு முறை வென்ற இரண்டு வீராங்கனைகளில் ஒருவர் என்ற தனிச்சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
இந்த சாதனைகள் மந்தனாவின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாமல், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உயர்வையும் வளர்ச்சியையும் சேர்த்தே குறிக்கின்றன.
இன்றைய இளம் வீராங்கனைகளுக்கு அவர் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அவர் திகழ்கிறார்.

தலைமைப் பண்பு!
பேட்டிங் திறமைக்கு மேலாக, ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்திய அணியில் முக்கியமான தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஹர்மன்ப்ரீத் கவுர் காயமடைந்தபோது, இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார்.
அப்போது வெறும் 22 வயது 229 நாள்களில் இருந்த மந்தனா, இந்திய மகளிர் அணியின் இளம் T20 கேப்டன் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இது ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டையும் உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகும்.

WPL கேப்டன்சி:
மகளிர் ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் Women’s Premier League (WPL) 2024-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மந்தனா, தனது அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
ஆடவர் ஐ.பி.எல்லில் இந்த ஆண்டு சீஸனில்தான் முதல்முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் மந்தனா.
தற்போது இந்தியா, இலங்கை சேர்ந்து நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாதனைகள் தொடர வாழ்த்துகள் மந்தனா!