பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த ஸ்கோரை 12.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி சேஸ் செய்தது.
அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து பேட்டர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றின் அதிவேக சதம் இது.
பந்துவீச்சில் ஜொலித்த நியூசிலாந்து
பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு மிகவும் நல்ல முடிவாக அமைந்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே டி காக், ரிக்கல்டன் இருவரையும் கோல் மெக்கான்சீ வீழ்த்தினார். அதனால், பொறுமையாக ஆட்டத்தைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.
மிடில் ஓவர்களில் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் சிக்கனமாகப் பந்துவீசியதால் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ரச்சின் ரவீந்திரா மார்க்ரம், மில்லர் என இரு அனுபவ பேட்டர்களின் விக்கெட்டுகளை வெளியேற்றினார். ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்த பிரெவிஸும் (34 ரன்கள்) நீஷம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 77/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது நியூசிலாந்து.
ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டப்ஸ் – யான்சன் இருவரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் விதமாக ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார். அதேசமயம் யான்சன் அதிரடியாக விளையாடினார். இந்த பார்ட்னர்ஷிப் 7.5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தது. ஸ்டப்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. கடைசி வரை சிறப்பாக ஆடிய யான்சன் ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, கோல் மெக்கான்சீ, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆலன் – செய்ஃபர்ட் அதிரடி
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கோ தென்னாப்பிரிக்காவுக்கு நேர்மாறாக இருந்தது. ஓப்பனர்கள் ஃபின் ஆலன், டிம் செய்ஃபர்ட் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்கள். 4.1 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்த நியூசிலாந்து, 7.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த செய்ஃபர்ட், ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம், ஃபின் ஆலன் கொஞ்சம் கூட வேகத்தைக் குறைக்காமல் புயல் வேகத்தில் ஆடினார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 33 பந்துகளில் சதம் விளாசினார். ஆலன் தன் இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இது அதிவேக சதம். அதுமட்டுமல்லாமல், இரண்டு முழுநேர ஐசிசி உறுப்பினர் நாடுகள் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட சர்வதேச சதம் இது. ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக சதம். ஆலன் தன் அதிரடியான ஆட்டத்தால் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக தோற்றாலும், தொடரை விட்டு வெளியேறியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு