SAvNz : 'கடைசி வரை போராடிய மில்லர்; வாரிச்சுருட்டிய சான்ட்னர்!' – இறுதிப்போட்டியில் நியூசிலாந்து

Share

சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் நேற்று மோதியிருந்தன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் டேவிட் மில்லர் கடைசி வரை போராடிய போதும் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.

Rachin – Williamson

`ஆசியாவில் இந்திய பேட்டரை போன்ற பக்குவம்’

லாகூரில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே நியூசிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது. போட்டியை கைக்குள்ளேயே வைத்திருந்தது. ஓப்பனர் வில் யங் மட்டும்தான் சீக்கிரமே அவுட் ஆனார். 21 ரன்களில் இங்கிடியின் பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருந்தார். இதன்பிறகு ரச்சின் ரவீந்திராவும் வில்லிம்சனும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் இணைந்து 164 ரன்களை சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா ஏற்கனவே ஆசிய சூழல்களில் சிறப்பாக ஆடக்கூடியவர். 2023 ஓடிஐ உலகக்கோப்பை, 2024 இந்தியாவுக்கு எதிரான தொடர் என இதற்கு நல்ல உதாரணங்களை அடுக்கலாம். இந்திய சூழலில் கிட்டத்தட்ட ஒரு இந்திய பேட்டரை போன்ற பக்குவத்துடன் ஆடக்கூடியவர். இங்கேயும் அப்படித்தான்.

இன்னொரு பக்கம் வில்லியம்சன். அவர் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரிலும் சிறப்பாகவே ஆடியிருந்தார். இங்கேயும் இன்னொரு முறை தனது க்ளாஸை நிரூபிக்கும் வகையில் ஆடினார். இருவரும் ஸ்பின்னரான மகாராஜவையும் நன்றாக ஆடியிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களையும் பார்த்து பக்குவமாக ஆடியிருந்தனர். பெரிதாக அதிரடி காட்டாவிடிலும் எங்கேயும் தேங்காமல் Run a Ball இல் முன்னேறுவதை உறுதி செய்தனர். இருவருமே சதத்தை கடந்தனர்.

Rachin – Williamson

ரச்சின் 108 ரன்களில் ரபாடாவின் பந்திலும் வில்லியன்சன் 102 ரன்களில் முல்டரின் பந்திலும் அவுட் ஆகினர். இதற்கு மேல் ரன்னை உயர்த்தும் பணியை டேரில் மிட்செலும் க்ளென் பிலிப்ஸூம் பார்த்துக் கொண்டனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 110 ரன்களை நியூசிலாந்து எடுத்திருந்தது. 130 ஸ்ட்ரைக் ரேட்டில் டேரில் மிட்செல் 49 ரன்களையும் 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் க்ளென் பிலிப்ஸ் 49 ரன்களையும் எடுத்திருந்தனர். இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 362 ரன்களை குவித்தது.

கிட்டத்தட்ட பாதி வெற்றியை நியூசிலாந்து உறுதி செய்திருந்தது. தென்னாபிரிக்க அணி சேஸிங்கை தொடங்கியது. அங்கேயும் ரிக்கல்டன் ஆரம்பத்திலேயே மேட் ஹென்றியின் பந்தில் அவுட் ஆனார். அதன்பிறகு பவுமாவும் வாண்டர் டஸனும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் இணைந்து 105 ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதத்தை கடந்தனர். பார்ட்னர்ஷிப்பாக நல்ல கூட்டணியாக இருந்தாலும் இவர்கள் அவுட் ஆகும்போதே தேவைப்பட்ட ரன்ரேட் 8 க்கு மேல் சென்றுவிட்டது. சாண்ட்னர் தனது நேர்த்தியான பௌலிங்கின் மூலம் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஒரு பக்கம் தேவைப்படும் ரன்ரேட் ஏறிக்கொண்டே இருந்தது.

Miller – Williamson

இன்னொரு பக்கம் சாண்ட்னர், ரச்சின், க்ளென் பிலிப்ஸ், ப்ரேஸ்வெல் என ஸ்பின்னர்களும் இறுக்கினர். இதனால் மார்க்ரம், க்ளாஸென் போன்றோரின் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்தது. கடைசியில் டெய்ல் எண்டர்களுடன் மில்லர் மட்டுமே நின்றார். இதேமாதிரியான அழுத்தமான சூழல்களில் மில்லர் எப்படி ஆடுவாரோ அப்படியே ஆடினார். பாரபட்சமின்றி அத்தனை பௌலர்களையும் அடித்து வெளுத்தார். ஆனால், அவரது அதிரடியும் போதவில்லை. கடைசி பந்தில் வந்து சதமடித்து ஸ்கோரை நெருக்கிக் கொண்டு வந்தார். அவ்வளவுதான் செய்ய முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் நாக் அவுட் சொதப்பல்கள் தொடர்வதை தவிர்க்கவே முடியவில்லை. 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com