அவரைத்தொடர்ந்து கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார். ஐந்தாவது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, ஜெய்ஸ்வால் நேராக அடித்த பந்தை கேட்ச் பிடிக்கத் தவறவிட்டார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் ரியான் பராக் ஸ்ட்ரைட்டாக அடித்த சிக்ஸர் உட்பட 13 ரன்கள் வந்தது. மொத்தமாக பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். பவர்பிளே முடிந்த கையோடு தனது ஸ்பின்னர்கள் கையில் பந்தை ஒப்படைத்தார் ரஹானே.

மொயின் – வருண் சுழலில் காலியான ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள்!
அதற்குப் பலனாக, மொயின் அலி வீசிய 7-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வந்தது. தொடர்ந்து, வருண் சக்ரவர்த்தி வீசிய 8-வது ஓவரில் சிக்ஸ் அடித்த இரண்டாவது பந்திலேயே தூக்கியடிக்க முயன்று கீப்பர் கையில் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார் ரியான் பராக். அடுத்த ஓவரிலேயே, மொயின் அலி வீசிய பந்தை ஹர்ஷித் ராணாவிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் அவுட்டானார் ஜெய்ஸ்வால். அதையடுத்து, வருண் சக்ரவர்த்தி வீசிய 10-வது ஓவரில் ஹசராங்கவும் தூக்கியடிக்க முயன்று ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேற, மொயின் அலி வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணாவும் கிளீன் போல்டாகி 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

வருண் சக்கரவர்த்தியும், மொயின் அலியும் வீசிய 8, 9, 10, 11 ஓவர்களில் மொத்தமாக 4 விக்கெட்டுகளைத் தாரைவார்த்த ராஜஸ்தான் அணி, 11 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. இந்த இக்கட்டான சூழலில், ராஜஸ்தானை சரிவிலிருந்து மீட்க துருவ் ஜோரலும், இம்பேக்ட் பிளேயர் ஷுபம் துபேவும் (சஞ்சுவுக்குப் பதில்) கைகோத்தனர். 12-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வர, 13-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் துருவ ஜோரல் மூலம் கிட்டத்தட்ட 5 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பவுண்டரி வந்தது. அந்த ஓவரோடு மொயின் அலியும் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுடன் தனது கோட்டாவை முடித்தார்.