இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் நேற்று வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 2 போட்டிகளில் இந்திய அணி தான் முதலில் பவுலிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்க தீவிரம் காட்டுவதால் இன்றைய போட்டி பரபரப்புடன் தான் இருக்கும் என்று ரசிகர்கள் இடையே எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்று பவுலிங் செய்யத் தேர்ந்தெடுத்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேசியதாவது, “ இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் பவுலிங் செய்யத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக தான் உள்ளது. இந்திய அணிக்கு முதலில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறேன்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். வித்தியாசமான கள சூழலில் விளையாடி எங்களுக்கு நாங்களே சவால்களை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றைய ஆட்டத்தில் கான்வேக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதில் டாரல் மிட்செல் விளையாடுகிறார். இன்றே நாங்கள் லாகூர் புறப்பட்டு சென்றுவிடுவோம். அங்கேயும் எங்களுக்கு மிக பெரிய பணி காத்துக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
அதன் பிறகு பேசிய ரோஹித் சர்மா, ”நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். டாஸ் இழந்தது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இந்தத் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் இரண்டாவதாக தான் நாங்கள் பேட்டிங் செய்தோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து பின் எங்களுடைய பவுலர்கள் இரவு நேரத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை காட்ட விரும்புகிறேன்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் எப்படி விளையாடினோமோ அதேபோல் தான் இன்றைய போட்டியிலும் விளையாட விரும்புகிறோம். சென்ற போட்டிகளுக்கு என்னென்ன செய்தோமோ அதேதான் இந்த போட்டிகளிலும் திரும்பவும் செய்வோம். இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் மொத்தமாக நாங்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறோம். இது எங்களுடைய சுழல் பந்துவீச்சாளர்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களை நன்றாக கட்டுப்படுத்தி இருப்பதைக் காட்டுகிறது. இன்றைய ஆட்டத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதில் வருண் சக்கரவர்த்தி விளையாடுகிறார்.” என்று கூறினார்.