Rohit: “இதுவே சரியான நேரம்… நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!" – ரோஹித் பற்றி ரவி சாஸ்திரி

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்தியா அணி 1 – 2 என்று பின்தங்கியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து தோல்வி, டிரா, தோல்வி என மோசமாக ஆடியிருக்கிறது. இதனால், சிட்னியில் நாளை தொடங்கும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.

ரோஹித் – கோலி

முக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இந்தத் தொடர் மட்டுமல்லாது கடைசியாக சொந்த மண்ணில் வங்கதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்) அணிகளுக்கெதிரான தொடர்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. கோலி தனது கடைசி 9 டெஸ்ட் மேட்சுகளில் 17 இன்னிங்ஸ்களில் ஒரு டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட், ஒரு அரைசதம், ஒரு சதம் என 359 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அதேபோல், ரோஹித் தனது கடைசி 8 டெஸ்ட் மேட்சுகளில், 15 இன்னிங்ஸ்களில் ஒரு டக் அவுட், 10 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட், ஒரேயொரு அரைசதம் என 164 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தைத் தேடிச்சென்று அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டாவது, ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் எங்கு இறங்கினாலும் தடுமாறுவது என கோலியும், ரோஹித்தும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவருகின்றனர். `தவறுகளைத் திருத்திக்கொண்டு சரியாக முடியவில்லையென்றால் ஓய்வுபெறுங்கள். காத்திருக்கும் இளம் வீரர்களுக்காவது வாய்ப்பு கிடைக்கட்டும்.’ எனப் பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், ரோஹித் ஓய்வுபெற இதுவே சரியான நேரம் என்று முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி

The ICC Review நிகழ்ச்சியில் ரோஹித் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “நான் ரோஹித்துக்கு அருகில் இருந்தால் நன்றாக அடித்து விளையாடச் சொல்வேன். இப்போது அவர் விளையாடுவது சிறப்பானதாக இல்லை. அவர் தனது கரியர் குறித்து முடிவெடுப்பார். ஒருவேளை, அவர் ஓய்வுபெற்றாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஏனெனில் அவருக்கும் வயதாகிறது.

2024-ல் 40 ஆவரேஜ் வைத்திருக்கும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள், பென்ச்சில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். அதனால்தான் சொல்கிறேன், ரோஹித் ஓய்வுபெற்றாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஆனாலும், இறுதியில் அவர் எடுப்பதுதான் முடிவு.

ரோஹித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால், அது தனி கதை. இல்லையெனில், அவர் மதிப்புடன் வெளியேற இதுவே சரியான நேரமாக இருக்கும். பந்தை எதிர்கொள்வதில் அவர் சற்று ஸ்லோவாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். தன்னுடைய இயல்பான ஆட்டத்தை அவர் ஆட வேண்டும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். ஒரு டெஸ்டில் தோற்றதால், தொடரை இழந்ததாக அர்த்தமில்லை.” என்று கூறினார்.

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com