கடந்த 2022-ல் கார் விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாக காம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நேராக டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் என்ட்ரி கொடுத்த பண்ட், அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த டிசம்பரில் ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பண்ட்டை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அப்போதே, அந்த அணிக்கு பண்ட் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவ்வாறே லக்னோ அணியின் கேப்டனாக பண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கேப்டனாக்கப்பட்ட பின்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிரபல வார்த்தைகளான, “ஆட்டத்தின் செயல்முறையில் கவனம் செலுத்தினால் முடிவு தானாக வரும்” என்பதை மேற்கோள் காட்டிய பண்ட், தான் அணியை வழிநடத்தும் போது இந்த ஆலோசனையை நிச்சயம் மனதில் வைத்துக்கொள்வதாகக் கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பண்ட் குறித்து பேசிய லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, “ஐ.பி.எல் வரலாற்றில் இவர் சிறந்த வீரராக வருவார். இத்தகைய ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரரை நான் பார்த்ததில்லை. ஐ.பி.எல்லின் சிறந்த கேப்டனாகவும் ஆவார். அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இவர் கிரிக்கெட் விளையாடுவார். சென்னை அணியும், மும்பை அணியும் சிறந்த அணி என்கிறார்கள் மக்கள். தோனியும், ரோஹித்தும் மறுக்க முடியாத அளவுக்கு சிறந்த வீரர்கள். என்னுடைய வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், 10 வருடங்களுக்குப் பிறகு மக்கள் தோனி, ரோஹித், பண்ட் என்று கூறுவார்கள்.” என்றார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…