சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியிலேயே தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதியிருந்தன. கராச்சியில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றிருக்கிறது. சுமாரான பந்துவீச்சாலும் மந்தமான பேட்டிங்காலும் சொந்த மண்ணிலேயே முதல் போட்டியை தோல்வியோடு தொடங்கியிருக்கிறது பாகிஸ்தான்.

டாஸ் வென்ற பாகிஸ்தான்
முகமது ரிஸ்வான் தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார். நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. 50 ஓவர்களில் அந்த அணி 320 ரன்களை எட்டியிருந்தது. சூழலை உணர்ந்து சிறப்பாக ஆடிய இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்கள் அந்த அணிக்கு கிடைத்திருந்தது. ஓப்பனர் வில் யங்கும் நம்பர் 5 இல் வந்த டாம் லேதமும் நின்று நிதானமாக பொறுமையாக ஆடினர். கிட்டத்தட்ட 20 ஓவர்களுக்கு பேட்டிங் ஆடிய இந்த கூட்டணி 118 ரன்களை எடுத்திருந்தது. ரன்ரேட் 6 க்கும் கீழ்தான் இருந்தது. ஆனாலும் இந்த பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. பவர்ப்ளேக்குள்ளாகவே கான்வே, வில்லியம்சன் என இரண்டு முக்கிய பேட்டர்களை நியூசிலாந்து இழந்திருந்தது. கான்வே அப்ராரின் பந்தில் போல்ட் ஆனார். வில்லியம்சன் நசீம் ஷாவின் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

பவர்ப்ளே முடிந்த சில ஓவர்களிலேயே டேரில் மிட்செல் ஹரீஸ் ராப் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று வட்டத்துக்குள்ளேயே கேட்ச் ஆனார். இந்த நிலையில்தான் வில் யங்கும் லேதமும் கூட்டணி சேர்ந்தனர். மிடில் ஓவர்களில் மேற்கொண்டு விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. நின்று ஆடி டெத் ஓவரில் பார்த்துக் கொள்ளலாம் என்பதில் தெளிவாக இருந்தனர். 16.3 வது ஓவரில் பேட்டிங்கை தொடங்கிய இந்த கூட்டணி, 37.2 வது ஓவர் வரை நின்றது. இடைப்பட்ட ஓவர்களில் 11 பவுண்டரிக்களை மட்டுமே அடித்திருந்தனர். ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் செய்து கொண்டிருந்தனர்.
டெத் ஓவர்களில் கியரை மாற்றிய நியூசிலாந்து
ஓடி ஓடி ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினர். ஸ்பின்னர்களை இருவருமே திறம்பட கையாண்டனர். டாம் லேதம் ஸ்பின்னர்களுக்கு எதிராக கச்சிதமாக ஸ்வீப் ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். சதத்தை கடந்தவுடன் வில் யங் கியரை மாற்ற முயன்றார். அந்த சமயத்தில் நசீம் ஷாவிடம் சிக்கிக் கொண்டார். பெரிய ஷாட்டுக்கு முயன்று 107 ரன்களுக்கு அவுட் ஆனார். இதன்பிறகு க்ளென் பிலிப்ஸ் லேதமுடன் கூட்டணி சேர்ந்தார். இந்தக் கூட்டணி கடைசி 13 ஓவர்களில் 125 ரன்களை எடுத்திருந்தது.

க்ளென்ஸ் பிலிப்ஸ் அரைசதத்தை கடந்திருந்தார். டாம் லேதம் கியரை மாற்றி வேகமாக ஆடி சதத்தை எட்டினார். பாகிஸ்தான் பௌலர்கள் டெத் ஓவர்களில் கடுமையாக திணறினர். யார்க்கரை மட்டுமே ஒற்றை ஆயுதமாக நம்பி வீசினர். அது எடுபடவே இல்லை. பீல்டர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதை அறிந்து இடைவெளிகளை சரியாக கணித்து இருவரும் ஷாட்களை ஆடினர். 118 ரன்களை எடுத்து லேதம் நாட் அவுட்டாக இருந்தார். க்ளென் பிலிப்ஸ் 156 ஸ்ட்ரைக் ரேட்டில் 61 ரன்களை எடுத்து கடைசி ஓவரில் ஹரீஸ் ராஃபிடம் அவுட் ஆனார். வில் யங் – டாம் லேதம், டாம் லேதம் – க்ளென் பிலிப்ஸ் இந்த இரண்டு கூட்டணிகளால் தான் நியூசிலாந்து அணி 320 ரன்களை எட்டியது.
நிதான பாபர்
பாகிஸ்தான் அணி சேஸிங்கை தொடங்கியது. பேட்டிங் வரிசையை சர்ப்ரைஸுடனே வைக்க முயலும் பாகிஸ்தானுக்கு இந்த முறை சவுத் சகீலும் பாபர் அசாமும் ஓப்பனர்களாக இறங்கினர். முதல் 10 ஓவர்களிலேயே பாகிஸ்தானின் தோல்வி உறுதியாகிவிட்டது. பவர்ப்ளேவான அந்த 10 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் எடுத்திருந்தது. வீசப்பட்ட 60 பந்துகளில் 47 பந்துகள் டாட் ஆடியிருந்தனர். இதற்கு மிக முக்கியமான சூத்திரதாரி பாபர் அசாம். 27 பந்துகளில் 12 ரன்களை எடுத்திருந்தார்.

டெஸ்ட் மேட்ச்சின் முதல் செஷனை ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருந்தார். அவரின் ஸ்டைலே அதுதான் என்றாலும் இங்கே கூடுதலாக பொறுமையை சோதித்து விட்டார். 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் கரியரில் அவர் அடித்த மெதுவான அரைசதங்களில் இதுவும். பாபர் அசாம் இப்படி ஆட இன்னொரு பக்கம் மற்ற வீரர்கள் பெரிய ஷாட்களாக ஆட முயன்று விக்கெட்டுகளையும் வேகமாக விட்டனர். நியூசிலாந்து அணியின் மிரட்டலான பீல்டிங்கும் பாகிஸ்தானுக்கு பாதகமாக அமைந்தது. ரூர்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாபர் அசாம் ஏற்படுத்திய சேதாரத்தை சல்மான் அகாவும் குஷ்திலும் சரிசெய்ய முயன்றனர். இருவரும் கிட்டத்தட்ட 150 ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பாக ஆடியிருந்தனர். டாப் ஆர்டரிலிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லாததால் பிரயோஜனம் இல்லாமல் போனது. 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்.

29 ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டில் நடக்கும் ஒரு ஐ.சி.சி தொடரின் முதல் போட்டியை பாகிஸ்தான் தோல்வியோடு தொடங்கியிருக்கிறது. 23 ஆம் தேதி பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு நாக் அவுட்டை போன்றது. அதில் வென்றால்தான் தொடரில் நீடிக்க முடியும்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play