80 ஓவர்கள் முடிந்தவுடன் நியூ பாலில் இந்தக் கூட்டணியை பிரித்து விடலாம் என நினைத்தனர். ஆனால், நியூபாலையும் நிதிஷ் ரெட்டியும் வாஷியும் சிறப்பாக எதிர்கொண்டனர். இதன்பிறகு பீல்டை வைத்து விளையாட ஆரம்பித்தனர். டைட்டாக அட்டாக் செய்ய முயன்றனர். போலண்ட்டே அலெக்ஸ் கேரியை ஸ்டம்புக்கு அருகே நிற்க வைத்தெல்லாம் உளவியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தார். நிதிஷ் ரெட்டி அதற்கும் பணிந்து போகவில்லை.
தொடர்ந்து அட்டாக் செய்தே ஆடினார். அவர் 80 ரன்களை கடந்திருந்த சமயத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சீக்கிரமே டீ ப்ரேக் விட்டார்கள். மழை வேறு பெய்ததால் ஆட்டம் தொடங்க இன்னும் தாமதமானது. கடைசி செஷன் தொடங்கிய போது முன்பிருந்த மொமண்டம் இல்லை. அதை உணர்ந்து கொஞ்சம் நிதானமாக நின்றும் ஆடினார். ஒரு வழியாக 99 ரன்களை எட்டிய போது வாஷியும் பும்ராவும் அடுத்தடுத்து அவுட். இன்னும் ஒரு விக்கெட்தான் மீதமிருக்கிறது. அது ஒரு தனி அழுத்தம். ஆனால், அதையெல்லாம் போட்டு குழப்பிக் கொள்ளாமல் போலண்ட் வீசிய பந்தை மிட் ஆனின் தலைக்கு மேல் பவுண்டரியாக அடித்து சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணியும் ஓரளவுக்கு சரிவிலிருந்து மீண்டது.
நிதிஷின் சதத்தை மைதானத்தில் நேரில் பார்த்த அவரின் தந்தை மனமுருகி ஆனந்த கண்ணீர் சிந்தினார். மகனுக்காக தனது அரசு வேலையை துறந்து கூடவே இருந்து கிரிக்கெட் பயிற்சி பெற உதவியவர். மகன் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது அவரின் கனவு. அது நிறைவேறிய தருணத்தில் மனிதர் பூரித்துப் போய்விட்டார்!