இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார்.
அதில் கோத்ரா ரயில் விபத்தை நினைத்துப்பார்க்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோத்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள்தான் “இதுவரை நடந்ததிலேயே மிகப் பெரிய கலவரம்’ என போலி பிரசாரம் செய்யப்படுவதாகவும் மோடி குற்றம்சாட்டினார். அத்துடன் 2002ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் 250 கலவரங்கள் ஏற்பட்டதாகவும், அடிக்கடி வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். “
“….ஆனால் 2002ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 22 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு பெரிய கலவரம் கூட நடக்கவில்லை. குஜராத் அமைதியாக இருக்கிறது” என்றார் மோடி.
மேலும், பலரும் அந்த கலவரத்தை வைத்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகவும், ஆனால் இறுதியில் நீதி வென்று நீதிமன்றங்கள் அவரது பெயரை வழக்கிலிருந்து நீக்கியதாகவும் கூறியுள்ளார்.
“அந்த நேரத்தில் எங்கள் அரசியல் எதிரிகள் ஆட்சியிலிருந்தனர் (மத்திய அரசில்). அவர்கள் எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்க வேண்டுமென்று நினைத்தனர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளைக் கடந்தும், நீதிமன்றங்கள் கவனமாக ஒன்றுக்கு இரண்டுமுறை நிலைமையை ஆராய்ந்து நாங்கள் முற்றிலும் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தன.
உண்மையாகவே கலவரத்துக்கு காரணமாக இருந்தவர்கள், நீதியை எதிர்கொண்டனர்” என்று பேசினார் மோடி.