லாரன்ஸ் கேங் உலகளவில் ரீச் ஆனது எப்படி?
பருத்திவீரன் படத்தில், கார்த்தி ஒரு டைலாக் பேசுவார். “இப்படியே கமுதி கோர்ட்டு ஜெயில்னு சுத்திட்டு இருந்தா எப்படி… ஏதாவது பெருசா செஞ்சுட்டு மெட்ராஸ் ஜெயில பார்த்துடணும் சித்தப்பா” என்பார். அந்த டைலாக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது, இந்த பிஷ்னோய் கேங். அந்த கேங்குக்கு 3 இலக்குகள் இருக்கின்றன.
1. கேங்கின் பெயரை பிரபலப்படுத்துவது
2. கேங்கின் பெயரைக் கேட்டாலே பயம் வர வைப்பது
3. மற்ற கேங்கின் ஏரியாவுக்குள் செல்வாக்கை செலுத்துவது.
இந்த இலக்குகளை படிப்படியாக செய்து கொண்டிருக்கிறது. அதுவும் திட்டமிட்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தும் சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.
பெயரை பிரபலப்படுத்துவது:
2018-ல் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற நேரத்தில், “சல்மானை நிச்சயம் கொல்வோம்” என பேட்டி கொடுத்தார் லாரன்ஸ் பிஷ்னாய். அந்த பேட்டி இந்தியா முழுவதும், பேசு பொருளானது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில், சல்மான் கான் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சல்மான் கானுக்கு அதில் ஒன்றும் ஆகவில்லை. சல்மானை தொடர்ந்து குறி வைப்பதால், பிஷ்னோய் கேங் அவ்வப்போது பேசுபொருளாகிவிடுகிறது.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் மையப்புள்ளியாகவும் பிஷ்னோய் கேங்தான் இருக்கிறது. 2023 ஜூலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அந்த கொலையில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும், பிஷ்னோய் கேங் போன்ற கிரிமினல் குழுக்களுக்கு, உளவு அமைப்பான RAW, தகவல்கள் திரட்டி கொடுப்பதாகவும், அதை வைத்து அந்த குழுக்கள் கனடாவில் வசிக்கும் சீக்கியர்களை குறிவைத்து கொல்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தியா அந்த குற்றச்சாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன.
இந்த விவகாரத்தில் கனடா அரசு பிஷ்னோய் கேங்கின் பெயரைப் பயன்படுத்தியது, சர்வதேச அளவில் அந்த கேங்குக்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்திவிட்டது.