டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் நாளை களமிறங்குகிறார். கோலியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2015-க்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் கடந்த வாரம் களமிறங்கினார்.
ஜம்மு காஷ்மீருக்கு எதிரான அந்த ஆட்டத்தில் மொத்தமாக இரண்டு இன்னிங்ஸ்களையுமே சேர்த்து 54 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் ரோஹித். இதனால், டெல்லியில் நாளை நடைபெறும் டெல்லி vs ரயில்வேஸ் போட்டியில் விராட் கோலி களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், நாளைய போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலியிடம், சிறுவன் கேள்வி கேட்பதும் அதற்கு அவர் பதிலளிப்பதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.