தனது அணியின் முக்கியமான வீரர்களான துருவ் ஜுரேல், ரியான் பராக், மற்றும் ஹெட்மையரை தக்க வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சாம்சம் பேசுகையில், “இது அணிக்குப் பெரும் பலம் தரும். ஒரே அணியில் நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் இருந்தால், அவர்களிடையே நல்ல புரிதல் உருவாகும். இது அணியின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, கேப்டனாக என்னுடைய வேலையையும் எளிதாக்குகிறது” என்றார்.
மேலும், ஜோஸ் பட்லர் பற்றிப் பேசிய அவர், “ஜோஸ் பட்லர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். அவர் எனக்கு மூத்த சகோதரனைப் போல் இருந்தார். நான் கேப்டன் ஆனபோது, அவர் துணை கேப்டனாக இருந்து எனக்குப் பெரிதும் உதவினார். அவரைத் தக்கவைக்க முடியாமல் வெளியே அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. இங்கிலாந்து தொடரின் போது கூட, அவருடன் டின்னர் சாப்பிடும்போது, இதைப் பற்றிப் பேசினேன். பட்லர் எங்களின் ராஜஸ்தான் குடும்பத்தில் ஒருவர்
தோனியுடனான தனது உறவைப் பற்றிப் பேசுகையில், “ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் மஹி பாயியைச் சுற்றி இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சென்னை அணிக்கு எதிராக விளையாடும்போதெல்லாம், அவருடன் உட்கார்ந்து பேச வேண்டும், அவர் எப்படிச் செயல்படுகிறார் என்று கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அது என் கனவு போல இருந்தது.
ஷார்ஜாவில் சென்னைக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் நான் 70-80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வாங்கினேன். அதன் பிறகு, மஹி பாயியைச் சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நேற்றே கூட அவரை மீண்டும் சந்தித்தேன். என் கனவு நிஜமாகி விட்டது போல ஒரு உணர்வு. அவருடன் கலந்துரையாடுவது எனக்குப் பெரும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.