16 வது ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற இருக்கிறது. சென்னை அணியும் குஜராத்தும் மோதும் இறுதிப்போட்டிக்கு முன்பாக மாலை 6 மணிக்கு நிறைவு விழா ஒன்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கின்றனர்.

குறிப்பாக, வைரல் பாடகி ஜோனிடா காந்தி நிறைவு விழாவில் கலந்துகொண்டு பெர்ஃபார்ம் செய்யவிருக்கிறார். இவர் போக ‘கிங்’ என செல்லப் பெயரிட்டு அழைக்கப்படும் பாலிவுட் தனியிசைப் பாடகரும் அவரின் ட்ரேட்மார்க்கான ‘து மான் மேரி ஜான்..’ பாடலை பாடவிருக்கிறார். தனியிசையில் கலக்கும் கிங் நேற்றிரவே மைதானத்திற்கு வந்து நீண்ட நேரம் பாடல்களைப் பாடி ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
கலைஞர்களின் பெர்ஃபார்மென்ஸ் போக தொழில்நுட்ப ரீதியாகவும் கண்கவர் நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மேலிருந்து ஒளி பாய்ச்ச தரையில் தமிழர்களின் வரலாறு காண்பிக்கப்பட்டதைப் போல ஒரு நிகழ்வும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான ஒத்திகைக்காக மைதானம் முழுவதுமே வெள்ளை ஸ்கீரின் விரிக்கப்பட்டது. மைதானத்தின் உச்சியில் இருக்கும் விளக்குகள் மூலம் இந்த வெள்ளை ஸ்க்ரீனில் வண்ண வண்ணமாக எண்களாகவும் சில விஷயங்கள் ஒளிபரப்பப்பட்டது. சர்ப்ரைஸாக வைக்கப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிறப்பு நடனம் இந்த நிகழ்வில்தான் நடக்கக்கூடும்.

இறுதிப்போட்டி முடிந்தவுடன் நடக்கும் கோப்பையை வழங்கும் விழாவிற்காக சிறப்பு மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. 12 அடி உயர அலங்கார வளைவுகள் மற்றும் பேட்டர்களை குறிக்கும் பெரிய மாடல்கள் மற்றும் தரையில் பெரிய அரைவட்ட வடிவிலான மேடை ஆகியவை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோக வெல்லும் அணி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ‘CHAMPIONS’ என்கிற வடிவமைப்பும் தனியாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மேடை உருவாக்கம் மற்றும் பேனர்கள் கட்டும் வேலைக்காக மட்டும் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாகவே இரவு பகலாக இந்த இறுதிப்போட்டிக்கான பணிகள் துரிதமாக நடந்திருக்கிறது.
இந்தத் தொழிலாளார்களையெல்லாம் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்து கொண்டிருந்த சௌம்யவர்தன் என்பவரிடம் பேசினேன்,
‘பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாகத்தான் இந்த பணியையெல்லாம் எடுத்து செய்ய முடியும். கொல்கத்தாவில் ‘Arun Shines’ என ஒரு கம்பெனி வைத்திருக்கிறோம். இறுதிப்போட்டியில் மைதானத்தில் நீங்கள் பார்க்கும் பதாகைகள், தட்டிகள், அலங்காரங்கள் என எல்லாமே எங்கள் குழு செய்ததுதான். டெல்லி, ஜெய்ப்பூர் போன்ற மைதானங்களிலும் இந்த சீசனில் வேலை பார்த்திருக்கிறோம். எங்களை போன்று ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு குழுவினர் இருப்பார்கள். அந்தந்த ஏரியாவிற்குள் வரும் மைதானங்களில் அவர்கள் அலங்கரிப்பார்கள். இங்க இறுதிப்போட்டிக்கான இந்த மேடைக்காக மட்டும் பிசிசிஐ பல லட்சங்களை செலவழித்துள்ளார்கள். டிசைனெல்லாம் அவங்களோட விருப்பத்தைத் தெரிவிப்பர். நாங்களும் அதுக்கு ஏற்றார் போல செய்து கொடுத்துவிடுவோம்.’ என்றார் சௌம்யவர்தன்.

அங்கிருக்கும் தொழிலாளர்கள் சிலரிடமும் பேசினோம். ‘ஒரு நாள் கூலியா 350 ரூபாய்தான் கொடுக்குறாங்க. ஆனா, ஐ.பி.எல் னு போட்டு ஒரு கார்டு கொடுத்துடுறாங்க. அதை வச்சு ஃப்ரீயா மேட்ச் பார்த்துக்கலாம். அதுதான் ஒரே சந்தோஷம்.’ என்றனர் தொழிலாளர்கள். வியக்க வைக்கும் பிரமாண்டகளுக்கு பின்னால் இதுபோன்ற கதைகள் இருப்பதுதான் வேதனையானது.