பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி 19வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் கலைந்தது. 31 ரன்கள் எடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம்இறங்கிய விராட் கோலியூன் உடனே ஆட்டமிழந்தார். 20வது ஓவரில், மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தினை விராட் கோலி கால் காப்பில் காப்பில் வாங்கினார். மைதானத்தில் இருந்த நடுவர் இதனை, அவுட் என அறிவித்தார்.
இந்திய அணி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார். இதனால், இந்திய அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.
22வது ஓவர் முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது ரோஹித் சர்மா – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி விளையாடி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்காக ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா ரன்களை குவித்து வருகிறார். 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 39 ரன்கள் எடுத்திருந்தது. அதில் ரோஹித் சர்மா மட்டுமே 28 ரன்கள் சேர்த்திருந்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கவும், இந்திய அணியின் ரன் குவிப்பைத் தடுக்கவும் திணறி வருகின்றனர்.
8வது ஓவரில், இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது. 10வது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா அரை சதம் அடித்தார்.
போக போக சுப்மன் கில்லும் பவுண்டரிகளை விலாச தொடங்கியதால், இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 93 ரன்கள் எடுத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
முதல் இன்னிங்ஸ்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணிக்காக ரச்சின் ரவீந்திரா – வில் யங் ஜோடி தொடக்க வீரர்களாக களம் கண்டது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இந்த இணை, மாயாஜால பந்துவீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் கலைந்தது. வருண், தான் வீசிய இரண்டாவது ஓவரில் வில் யங் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார்.
10வது ஓவரில் பந்து வீச வந்த குல்தீப் யாதவ், அவர் வீசிய முதல் பந்திலே ரச்சின் ரவீந்திராவை அவுட் ஆக்கினார். அடுத்து கேன் வில்லியம்சன் – டேரில் மிட்செல் ஆகியோர் விளையாடி வந்தனர்.
13வது ஓவரை மீண்டும் குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தினை கேன் வில்லியம்சன் அடிக்க, அதை குல்தீப் யாதவ் எளிமையாக கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது.
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணி ரன்களை குவிக்க திணறி வந்தது. 22வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை, நியூசிலாந்து அணியின் டாம் லாதம் கால் காப்பில் வாங்கினார். மைதானத்தில் இருந்த நடுவர் இதனை, அவுட் என அறிவிக்கவில்லை.
இதனால் இந்திய அணி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார். இதனால், இந்திய அணி ஒரு ரிவ்யூவை இழந்தது.
ஆனால் 24வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில், மீண்டும் டாம் லாதம் கால் காப்பில் வாங்கினார். மைதானத்தில் இருந்த நடுவர் இதனை, அவுட் என அறிவித்ததால், நியூசிலாந்து அணி ரிவ்யூ கேட்டது. கள நடுவரின் முடிவு சரியானதாக இருந்ததாக மூன்றாவது நடுவர் அறிவித்ததால், நியூசிலாந்து அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. டாம் லாதம் ஆட்டமிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்ததாக கிளென் பிலிப்ஸ் களமிறங்கினார். டேரில் மிட்செல் – கிளென் பிலிப்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சி செய்தனர்.
37வது ஓவருக்குள் இந்திய அணி, மோசமான பீல்டிங்கினால் நான்கு முறை விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டது.
38வது ஓவரில் வருண் சக்கிரவர்த்தி வீசிய பந்தில், கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். மைக்கேல் பிரேஸ்வெல் அடுத்து களம் இறங்கினார்.
40வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை சேர்த்திருந்தது. இதற்கு பிறகு மைக்கேல் பிரேஸ்வெலின் சிறப்பான ஆட்டத்தினால் ஆட்டம் சூடு பிடித்தது. அவர் மாறி மாறி பவுண்டரி மற்றும் சிக்ஸ்-களை விலாச ஸ்கோர் உயர்ந்தது
சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்செல்- மைக்கேல் பிரேஸ்வெல் இணை, 46வது ஓவரில் கலைந்தது. முகமது ஷமி வீசிய பந்தினை டேரில் மிட்செல் தூக்கி அடிக்க, அதை ரோகித் சர்மா கேட்ச் பிடித்தார். டேரில் மிட்செல் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்
பட மூலாதாரம், Getty Images
46வது ஓவர் முடிந்த பிறகு, நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் களமிறங்கினார். ஆனால் 49வது ஓவரில், அவரும் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணியின் துருப்புச்சீட்டு பேட்ஸ்மேனாக இருந்த மைக்கேல் பிரேஸ்வெல், 39 பந்துகளில் 49.5 ஓவரில் அரை சதம் அடித்தார்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட்டு இழப்புக்கு 251 ரன்களை சேர்த்திருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், இதுவே நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் ஆபத்பாந்தவனாக இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை இழந்துள்ளார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை அவர் சமன் செய்திருப்பதாக இஎஸ்பிஎன் இணையதள புள்ளிவிவரம் தெரிக்கிறது.
நியூசிலாந்து அணியில் ஒரே மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஹென்றிக்குப் பதிலாக நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
நியூசிலாந்து அணி
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் யான்சென், வில்லியம் ஓ’ரூர்க்கி, நேதன் ஸ்மித்.

மொத்தம் 25 ஆயிரம் இருக்கைகள் கொண்ட துபை மைதானம் முழுமையாக நிரம்பி, ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 40 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அந்த போட்டியில் நியூசிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்தியா இம்முறை சாதிக்குமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தியா கடந்து வந்த பாதை
நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இதுவரையிலான ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகளுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து அணியையும் இந்தியா வென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து கடந்து வந்த பாதை
நியூசிலாந்தைப் பொறுத்தவரை, நடப்புத் தொடரில் இந்தியாவிடம் மட்டும் தோல்வி கண்டுள்ளது. லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் அந்த அணி வென்றது. அரையிறுதியில் வலுவான தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்து நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு