இதன்மூலம் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷேன் வார்னை சமன் செய்திருக்கிறார். மோனிமுல் ஹக்கின் விக்கெட்டை அஷ்வின் போல்டாக்கி எடுத்திருந்தார். அந்த விக்கெட்டுக்கு மட்டும்தான் பந்து பெரியளவில் திரும்பியிருந்தது. மற்றபடி பெரும்பாலான சமயங்களில் பிட்ச் பௌலர்களுக்கு உதவவே இல்லை. அப்படியொரு சூழலில்தான் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஒரு செஸ் வீரனைப் போல யோசித்தார் அஷ்வின்.
வெறுமென ஃபீல்ட் செட்டப்களின் மூலம் மட்டுமே வங்கதேச வீரர்களை அணைகட்டி, தான் விரும்பிய இடத்தில் அவர்களை ஷாட் ஆட வைத்து வீழ்த்தினார் அஷ்வின். மெஹிதி ஹசனின் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதத்தை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதலில் ஒரு ஸ்லிப், சில்லி பாய்ண்ட், கவர், தேர்டு மேன் என வைத்து ஆப் சைடில் அவர் ஸ்கோர் செய்வதையே தடுத்தார். இதனால் அவர் லெக் சைடில் ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி லெக் சைடில் ஆடினால் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகும்படி பீல்ட் வைத்திருந்தார். ஆனால், இந்த அணைக்கட்டலும் மெஹிதி வீழவில்லை. மடக்கி பைன் லெக்கில் ஒரு பவுண்டரி அடிப்பார்.
அடுத்த ஓவரில் இதற்கும் அணைக்கட்டியிருந்தார் அஷ்வின். ஸ்லிப், ஷார்ட் லெக், லெக் கல்லி என வைத்து மெஹிதியின் ஆப்சன்களை தடுத்தார். இப்போது மெஹிதி இறங்கி வந்து பெரிய ஷாட்டுக்குச் செல்கிறார். லாங் ஆனில் கேட்ச். இப்படியாகத்தான் அத்தனை விக்கெட்டுகளையும் லைன் & லெந்த்தை வைத்தும் பீல்ட் செட்டப்பையும் வைத்தே வீழ்த்தினார்.
அஷ்வினுக்குத்தான் ஆட்டநாயகன் விருதையும் கொடுத்திருந்தார்கள். ‘இதே சேப்பாக்கம் மைதானத்தின் கேலரியிலிருந்து பல சர்வதேசப் போட்டிகளை ரசிகனாகப் பார்த்திருக்கிறேன். இங்கே ஆடும் உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.’ எனப் பேசியிருந்தார். வளர்ந்த இடத்திலேயே ஹீரோவாக வலம் வருவது அஷ்வின் சொல்வதைப் போல வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வாகத்தான் இருக்கும்.