How To: புளிப்பும் காரமுமாக க்ளாஸிக் புளியோதரை செய்வது எப்படி? I How To Make Classic Puliyodharai?

Share

தென்னிந்தியர்களின் பிரியத்திற்குரிய உணவு வகைகளில் ஒன்று, புளியோதரை. புளிப்பும் காரமுமாக நாவுறவைக்கும் சுவையில் அதை செய்ய விரும்பும் பலருக்கு, அந்த ரெசிப்பி சரியாகப் பிடிபடுவதில்லை.

புளி

அதற்கான செய்முறையை இங்கே தருகிறார், பெங்களூருவைச் சேர்ந்த உமா ராமநாதன். சமையல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டிருக்கும் இவரது இந்த ரெசிப்பி, ஒரு பெர்ஃபெக்ட் புளியோதரையை நீங்கள் ருசிபார்க்க உதவும்.

தேவையான பொருள்கள்:

புளி – 2 எலுமிச்சை அளவு (தண்ணீரில் ஊறவைத்து, நன்கு கரைத்து, தேவையான அளவுக்கு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்)

கிள்ளி வைத்த நீட்டு மிளகாய் வற்றல் – 6 (தாளிக்க)

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு

மஞ்சள்தூள் மற்றும் உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

Representational Image

புளியோதரை பவுடர் தயாரிக்க

மிளகாய் வற்றல் – 7 (எண்ணிக்கையில்)

வெந்தயம் – 4 டீஸ்பூன்

தனியா (கொத்தமல்லி விதைகள்) – 6 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன் (வறுக்க)

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, புளியோதரை பவுடர் தயாரிக்கத் தேவையான பொருள்களான மிளகாய் வற்றல், வெந்தயம், தனியா, கடலைப்பருப்பு, மிளகு ஆகிய அனைத்தையும் அதில் மொத்தமாகச் சேர்த்து, பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை பொடியாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியானது அதிகக் கொரகொரப்பாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நைஸாகவும் இருக்கக்கூடாது. நடுத்தர அளவில் பொடித்து எடுக்க வேண்டும்.

வாணலியில் தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் விட்டுச் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் புளிக்கரைசலை அதில் சேர்க்கவும். பின்னர் இதில் மஞ்சள்தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் இதனுடன் சேர்த்துக் கலவையை நன்கு கொதிக்கவிடவும்.

உமா ராமநாதன், சமையல் கலைஞர்

கலவை நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்திற்கு வந்தவுடன், மிக்ஸியில் பொடித்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து நன்கு கலந்துவிட்டு இறக்கிவிடவும். ஏற்கெனவே வறுத்து அரைத்த பொடியைத்தான் இதில் சேர்க்கிறோம் என்பதால், மறுபடியும் இதனைக் கொதிக்கவிடத் தேவையில்லை. நன்கு கலந்துவிட்டு இறக்கினால் போதும்.

அவ்வளவுதான்… நாவூறவைக்கும் புளிக்காய்ச்சல் ரெடி.

சாதம் கலக்கும் முறை:

புளியோதரை சூப்பராக வரவேண்டும் என்றால் சாதத்தின் பதமும் சரியாக இருக்கவேண்டும். சாதம் குழைந்தும் இருக்கக்கூடாது, ஊசி போலக் குத்தவும் கூடாது. மென்மையான பதத்தில் பொலபொலவென சாதத்தை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவு சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதில், தயாரித்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை தேவையான அளவு சேர்த்துக் கலந்தால் பெர்ஃபெக்ட் புளியோதரை ரெடி.

வடகம், வற்றல், அவியல், தேங்காய் துவையல் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட, இந்தப் புளியோதரை மிகவும் சூப்பராக இருக்கும்.

மிளகாய்

குறிப்பு:

* காரம் அதிகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தாளிக்கும் மிளகாய் வற்றலின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம்.

* பெருங்காயத் தூளிற்கு பதிலாக கட்டிப் பெருங்காயத்தை தேவையான அளவுக்கு எடுத்து வறுத்துப் பொடிசெய்து சேர்த்தால் புளிக்காய்ச்சல் இன்னும் வாசனையுடன் இருக்கும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com