Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது… 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி நாயகன் விடைபெற்றார்!

Share

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் 2003, 2007, 2015, 2019, 2023 உலகக் கோப்பைத் தொடர்கள் இந்திய அணிக்கு மறக்க முடியாத சோகங்களை ஏற்படுத்தின. இவற்றில், எதிரணி மொத்தமாக இந்திய அணியின் கனவை நொறுக்கியதென்றால், 2019 உலகக் கோப்பையில் மட்டும் ஒரே ஒரு வீரர் மொத்தமாக இந்திய அணியின் உலகக் கோப்பைக் கனவைத் தகர்த்தார்.

2019 உலகக் கோப்பை, இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம். மழையால் அப்படியே தலைகீழாக மாறிய பிட்ச் தன்மை, இரு அணிகளுக்கும் பேட்டிங்கில் கடும் சவாலைத் தந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது.

2019 CWC IND vs NZ

அடுத்து, 240 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங்கிலேயே அதிர்ச்சியைத் தந்தனர் நியூசிலாந்து பவுலர்கள். ரோஹித், கோலி, கே.எல்.ராகுல் மூன்று பேரும் 1 ரன்னில் அவுட்டாகினர். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்குப் போராடி தலா 32 ரன்கள் அடித்துக் கொடுத்தனர்.

30.3 ஓவர்களில் இந்தியா 92 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற இக்கட்டான சூழலில் இருந்தபோது தோனி, ஜடேஜா கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ரசிகர்களுக்கு தங்களின் பேட்டிங்கால் நம்பிக்கையளித்துக் கொண்டிருந்தது. ஒருபக்கம், தோனி மிகவும் நிதானமாக ஆட, மறுபக்கம் இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் வீரர்களைத் திணறடித்த எதிரணி பவுலர்களை அசால்ட்டாக டீல் செய்துகொண்டிருந்தார் ஜடேஜா. எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஜடேஜா அடித்த 48-வது ஓவரின் ஐந்தாவது பந்து கேப்டன் வில்லியம்சன் கைகளில் தஞ்சம் புகுந்தது.

ஜடேஜா – 2019 CWC IND vs NZ

4 பவுண்டரி, 4 சிக்ஸ் என அதிரடி காட்டிய ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பை தோனியிடம் ஒப்படைத்து பெவிலியன் திரும்பினார். ஜடேஜா அவுட்டான சமயத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 208-7. வெற்றிக்கு 13 பந்துகளில் 32 ரன்கள் தேவை. களத்தில் 68 பந்துகளில் 42 ரன்களுடன் நின்றுகொண்டிருந்த தோனி, 48-வது ஓவரின் கடைசி பந்தையும் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக் கொண்டார்.

இறுதிப்போட்டிக்குச் செல்ல இந்தியாவுக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை. நியூசிலாந்துக்கோ தோனியின் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. `தோனி களத்தில் நிற்கிறாரா, கவலைப்படாதீர்கள் நம் கேப்டன் பார்த்துக்கொள்வார்’ என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நம்பியது போல, நம்பிக்கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் அனைவரும், ஃபெர்குசன் வீசிய 49 ஓவரின் முதல் பந்தை தோனி சிக்ஸ் அடித்ததும் துள்ளிக் குதித்தனர். அடுத்த பந்து ரன் எதுவுமில்லை டாட். ஒவ்வொரு டாட் பாலும் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பைக் குறைத்துக்கொண்டிருந்த வேளையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்தார் அந்த கிவி வீரர்.

2019 CWC IND vs NZ

அந்த பந்தில் முதல் ரன்னை அடித்துவிட்டு ஸ்ட்ரைக்கைத் தக்கவைக்க இரண்டாவது ரன்னுக்குத் திரும்பினார் தோனி. கிரீஸுக்குள் அவரின் பேட் நுழைய ஸ்டம்புகளின் பெயில்ஸ்களும் பறந்தன. ரசிகராக மாறி அதிர்ச்சியடைந்த நடுவர், அவுட்டா நாட் அவுட்டா என்ற குழப்பத்தில் மூன்றாவது நடுவரிடம் சென்றார். இருதரப்பின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களும் அந்த பெரிய எல்.இ.டி திரையை உற்றுப்பார்க்க, அதில் வந்த அவுட் என்ற வார்த்தை அங்கேயே நியூசிலாந்தின் வெற்றியையும் உறுதி செய்துவிட்டது.

பேட்டுக்கும், கிரீஸுக்கும் இருந்த ஒரு இன்ச் இடைவெளியில் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கான கதவு மூடப்பட்டுவிட்டது. நொறுங்கிய மனதோடு தோனி பெவிலியன் நோக்கி நடக்க, களத்தில் ஒட்டுமொத்த நியூசிலாந்து வீரர்களும் தோனியை ரன் அவுட்டாகிய அந்த கிவி வீரரை கொண்டாடித் தீர்த்தனர். அவர்தான், நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்தில் (Martin Guptill). இது நடந்து, அடுத்த உலகக் கோப்பையும் நடந்து முடிந்துவிட்டது. ஆனாலும், அந்த ஒரு ரன் அவுட் ரசிகர்களை இன்றும், `அன்னைக்கு மட்டும் தோனி அவுட்டாகலனா இந்தியா ஃபைனல்ஸ் போயிருக்கும்ல. கோலி, ரோஹித்னு எல்லோரும் உலகக் கோப்பையோடு தோனிக்கு ஃபேர்வெல் கொடுத்திருப்பாங்கல’ என்று புலம்ப வைத்திருக்கிறது.

2019 CWC IND vs NZ

இதற்கெல்லாம் முக்கிய காரணம் கப்தில் மட்டுமே. மேலும், இங்கிலாந்துக்கெதிரான இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வாய்ப்பையும் கப்திலுக்கு வழங்கியது வரலாறு. ஆனால், தோனியின் ரன் அவுட் எப்படி இந்திய அணியின் உலகக் கோப்பை கனவைத் தகர்த்ததோ, அதுபோல இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் கப்திலின் ரன் அவுட் நியூசிலாந்தின் முதல் உலகக் கோப்பையைத் தூரமாகத் தள்ளிவைத்து.

இருப்பினும், நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் என்றும் கப்திலுக்கு தனி இடம் இருக்கும். நியூசிலாந்துக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 3,531 ரன்களுடன் இவரே முதலிடத்தில் இருக்கிறார். கப்தில் ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 2,586 ரன்களும் அடித்திருக்கிறார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில், ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவர் என்ற சாதனை (237 நாட் அவுட் – 2015 உலகக் கோப்பை) இவர் வசமே இருக்கிறது.

Martin Guptill

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த ஒரே நியூசிலாந்து வீரரும் இவரே. இத்தகைய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கப்தில், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

சென்று வாருங்கள் கப்தில், நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் உங்களின் பெயருக்கு எப்போதும் தனி இடம் உண்டு! இந்தியாவும் உங்களை மறக்காது!

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com