ஐந்தாவது ஓவர் மீண்டும் ஷமி. ‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஓவர் முழுக்க நீ அடிப்பியாம். கடைசி பால் நான் விக்கெட் எடுப்பேனாம். ஓகே?’ என பேசிவைத்தது போல திரிபாதியை வெளுக்கவிட்டு கடைசி பாலில் பெலிவியனுக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மாவோடு ஜோடி சேர்ந்தார் மார்க்ரம். பூரண் விஞ்ஞானத்திற்கே வீம்பாய் சவால் விடக்கூடியவர். பால்வீதியையே தொட்டுவிட்ட அறிவியல் கணித சமன்பாடுகளால் பூரண் எந்த மேட்ச்சில் ரன் அடிப்பார் என்பதை மட்டும் இம்மியளவுகூட கணிக்க முடியாது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் சுந்தரின் பார்மும் கேள்விக்குறியே. எனவே ஒரு விக்கெட் விழுந்தாலும் அணிக்கு சிக்கல் எனத் தீர்மானித்து மிக நிதானமாக ஆடினார்கள் இருவரும்.
ரஷித் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர், அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் என அபிஷேக் அடித்ததைப் பார்த்து சீனியர் வீரர்களே சிலிர்த்துப் போனார்கள். விளைவு ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 112/2. சிக்ஸரோடு தன் அரைசதத்தையும் கடந்தார் அபிஷேக்.
அடுத்து வந்த பெர்குசனையும் பேட்ஸ்மேன்கள் இருவரும் விரட்டி விரட்டி அடிக்க, மீண்டும் ரஷித்தை கொண்டுவர வேண்டிய நிலைமை. இத்தனைக்கும் ஹர்திக், திவேதியா என இரு ஆல்ரவுண்டர்கள் இருந்தும் ஐந்து பௌலர்களை மட்டுமே கடந்த சில ஆட்டங்களாக ஏன் பயன்படுத்துகிறார் என்பது கேப்டன் ஹர்திக்குக்கே வெளிச்சம். ரஷித் வீசிய 15வது ஓவரில் மட்டும் 13 ரன்கள். நான்கு ஓவர்களில் ரஷித் கொடுத்தது 45 ரன்கள், அதுவும் விக்கெட்டே இல்லாமல். ‘பசங்களை எப்படி ட்ரெயின் பண்ணியிருக்கேன் பாத்தியா?’ என ஒருபக்கம் பேட்டிங் கோச் பிரையன் லாரா காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து’ பாடிக்கொண்டிருந்தார் ஹெட் கோச் டாம் மூடி.