பட மூலாதாரம், Getty Images
“இப்போது கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் பின்பு சந்தோசமாக இருக்கலாம்” என்பது 90கள் வரை வேலைக்கு சென்ற இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நியாயமாக இருக்க வேண்டும், என் வேலைக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், எனது நேரமும் திறமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பது ஜென் ஜி தலைமுறையினரின் (1995-2006ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள்) எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
சமீபத்தில் சமூகவலைதளத்தில் ‘வேலை வேண்டாம்’ என்று நிராகரிக்க ஜென் ஜி தலைமுறையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கூறிய காரணம் வைரலானது.
புதிதாக வேலை தேடும் அவரிடம் வேலை நிமித்தமாக சில நேரங்களில் சனிக்கிழமைகளிலும் பணி செய்ய வேண்டியிருக்கும் என்று நிறுவனம் தனது நிபந்தனைகளை கூறியுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், “எனது 30களிலேயே என்னை அயர்ந்து போகச் செய்யும் வேலை எனக்கு வேண்டாம்” என்று பதிலளித்து வேலையை மறுத்துள்ளார்.
இவர் 90களின் பிற்பகுதியில் பிறந்த ஜென் ஜி தலைமுறையினரின் பிரதிநிதி என்றே கூறலாம். வாழ்க்கை-வேலை சமநிலை குறித்த அவர்களின் கண்ணோட்டமும், அணுகுமுறையும் பணிச்சூழல்களை மாற்றி வருகின்றன. இது குறித்து தெரிந்துக் கொள்ள பிபிசி தமிழ் பல்வேறு இடங்களில் வேலை பார்க்கும் ஜென் ஜி தலைமுறையினரிடம் பேசியது.
வேலை நேரம்
வேலை நேரம் ஒப்புக்கொண்ட அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஜென் ஜி தலைமுறையினர் எதிர்ப்பார்க்கின்றனர். வாழ்க்கை-வேலை சமநிலைக்கு இது மிகவும் முக்கியம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 22வயது நந்தினி, “ஒரு நல்ல வேலை என்றால் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதது. ஏதோ அவசரம், இன்றே செய்து முடிக்க வேண்டிய வேலை என்றால் ஒன்றிரண்டு நாட்கள் கூடுதல் நேரம் வேலை செய்யலாம், ஆனால் அதுவே தொடர்ந்தால் பணி செய்ய முடியாது” என்கிறார்.
படித்து முடித்து தனது முதல் வேலையில் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் அவர், “எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், வாரத்துக்கு ஐந்து நாட்களுக்கு மேல் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் அங்கு சேர மாட்டேன். கண்டிப்பாக இரண்டு நாட்கள் சொந்த வேலைகளுக்காக வேண்டும்” என்கிறார்.
இதே கருத்தை பிரதிபலிக்கும் 23வயது க்ருதிக், “பிடித்த வேலையாக இருந்தால் சில நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்யலாம். அல்லது ஒரு நாளுக்கு ஏழு மணி நேரங்கள் மட்டுமே வேலை என்றால் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்யலாம். அதுவும் திருமணமாகிவிட்டால் கண்டிப்பாக வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை தேவைப்படும்” என்கிறார்.
வேலை நேரம் முடிந்த பிறகு, வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்கிறார்.
“நான் எனது பள்ளிக்காலத்திலும் கல்லூரி காலத்திலும் விடுதியில் இருந்தேன். இப்போது தான் பெற்றோருடன் இருக்கிறேன். அவர்களுடன் அதிக நேரம் இருக்கவில்லை என்றாலும், இருக்கும் நேரத்தை தரமானதாக செலவழிக்க விரும்புகிறேன், கூடுதல் வேலை என்றால் அதை அலுவலகத்திலேயே ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் இருந்து முடித்துவிட தயாராக இருக்கிறேன். ஆனால் வீட்டில் இருக்கும் போது வேலை செய்ய சொல்வது சரியில்லை” என்கிறார் க்ருதிக்.
பட மூலாதாரம், Getty Images
“ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஐந்து நாட்கள் விடுப்பு எடுத்து, வெளியூர் பயணம் மேற்கொள்வது எனக்கு மிகவும் அவசியமானது. அதை அனுமதிக்கக் கூடியதாக வேலை இருக்க வேண்டும்” என்கிறார் 24 வயது ஶ்ரீதர் மணிவண்ணன்.
டெலாய்ட் வெளியிட்ட ‘2025 GenZ and Millenial Survey’ என்ற ஆய்வு அறிக்கையில், ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்புகளுக்கு செல்வதை விட வாழ்க்கை-வேலை சமநிலையையே ஜென் ஜி தலைமுறையினர் அதிகம் விரும்புவதாக கூறுகிறது.
“ஜென் ஜி தலைமுறையினரில் 6% பேர் மட்டுமே, அலுவலகத்தில் உயர் பொறுப்புகளுக்கு செல்வது தங்கள் முதன்மை இலக்கு என்று கூறியுள்ளனர்” என்று அந்த அறிக்கையின் தரவுகள் கூறுகின்றன.
அதே நேரம், அவர்கள் இலக்கு இல்லாமல் இல்லை, “ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்று கேட்ட போது, கற்றல் மற்றும் வளர்ச்சி அவர்களின் முதல் மூன்று காரணங்களில் ஒன்றாக இருக்கிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
பாராட்டு
தான் வேலை செய்கிறோம் என்பதை முறையாக தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவிக்க வேண்டியது முக்கியம், அதை செய்யாமல் இருப்பது சம்பந்தப்பட்டவரின் தவறு ஆகும் என்கிறார் க்ருதிக்.
“ஒரு குழுவாக வேலை செய்து க்ளைண்டுக்கு வேலையை சமர்ப்பிக்கும் போது, அதில் நன்றாக பேசக் கூடியவரே அதிக கவனம் பெறுவார். அந்த குழுவில் அதிகம் வேலை செய்தவர், தனது வேலையை நான் தான் செய்தேன் என்று சுட்டிக்காட்ட வேண்டும், அது மிகவும் முக்கியம். இல்லையென்றால் முறையான அங்கீகாரம் கிடைக்காது, பின்பு வேலையின் மீது அவருக்கு கோபம் வரும்” என்று விளக்குகிறார்.
பல அலுவலகங்களில் ஜென் ஜி தலைமுறையினரின் உடனடித் தலைவர்களாக இருப்பது 90ஸ் கிட்ஸ். ஜென் ஜி தலைமுறையினருடன் பணி செய்வது குறித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தது பிபிசி தமிழ்.
“பாராட்டுக்களையும், அங்கீகாரத்தையும் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். ஒரு முறை எனது குழுவில் ஒருவர் சிறப்பாக பணியாற்றியதற்காக க்ரெடிட் பாயிண்ட்ஸ் கொடுத்தேன். உடனே குழுவில் இருந்த மற்றொருவர் முன்பு தனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். பிறகு, இந்த பாய்ண்ட்ஸ் கொடுப்பதை கட்டாய சுழற்சி முறையாக்கிவிட்டேன்.” என்று கூறுகிறார் முன்னணி ஐடி நிறுவனத்தில் இரண்டு குழுக்களை நிர்வகித்து வரும் 34 வயது வைஷ்ணவி.
தாங்கள் கேட்க முடியாததை, சொல்ல முடியாதததை ஜென் ஜி தலைமுறையினர் கேட்கின்றனர் என்ற எண்ணம் 90ஸ் கிட்ஸ்க்கு இருப்பதை வைஷ்ணவி ஒப்புக்கொள்கிறார்.
“அவர்கள் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லையே, அவர்களுக்கு உரியதை தான் கேட்கிறார்கள். இதனால் பிறருக்கு தீங்கு ஏற்பட போவதில்லை. எத்தனை ஆண்டுகள் பணி முடிந்த உடன் பதவி உயர்வு கிடைக்க வேண்டும், எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதை எனது தலைமுறையினர் போல் அல்லாமல் இவர்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர்” என்கிறார்.
“உரிய நேரத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கவில்லை என்றால், வேலையை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அல்லது உடனே என்னை வேறு குழுவுக்கு மாற்றி விடுங்கள் என்று கூறுகின்றனர்.
இவை எல்லாவற்றையும் பதவி உயர்வின் போது கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ” என்கிறார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நஸ் ரீன்.
அதே நேரம் ஜென் ஜி தலைமுறையினரிடம் 90ஸ் கிட்ஸ் மேலாளர்கள் குறித்து கேட்ட போது, ” ஒரு வேலையை கொடுத்து விட்டு, அது குறித்து மணிக்கு ஒரு தடவை வேலை நடக்கிறதா என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதை நாங்கள் விரும்புவதில்லை. வேலையை முடித்துவிட்டு கூறலாம் என்று இருப்போம்” என்கிறார் ஶ்ரீதர் மணிவண்ணன்.
டெலாய்ட் ஆய்வில், 31% ஜென் ஜி தலைமுறையினர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு வேலைக்கு மாற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் : பணம், வேலைக்கான அர்த்தம், வாழ்நலம். வேலையில் திருப்தி பெறுவது வேலை செய்வதற்கான முக்கிய தூண்டுதல் என 89% ஜென் ஜி தலைமுறையினர் அந்த ஆய்வில் கூறியுள்ளனர்.
ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் முன், அதன் மூலம் சமூகத்துக்கு தங்கள் பங்களிப்பு இருப்பது முக்கியம் என 54% ஜென் ஜி தலைமுறையினர் கருதுகின்றனர்.
நல்ல மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?
வேலை பார்க்கும் பணிச்சூழல் மிகவும் ஆரோக்யமாக, நட்பானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். “ப்ரோ என்றழைக்கும் வகையிலான நட்பு தனக்கும் தனக்கு வேலை கொடுப்பவருக்கும் இடையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்கிறார் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 30வயது சக்ரவர்த்தி.
“நான் சார் என்று தான் அழைப்பேன். மேலாளரிடம் பேசவே பயப்படுவேன். ஆனால் இப்போது வரும் இளைஞர்கள் ப்ரோ என்கின்றனர். வெளிப்படையாக பேசுகின்றனர். நான் செய்ய முடியாததை அவர்கள் செய்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது” என்கிறார்.
இதை உண்மையே என்கின்றனர் ஜென் ஜி தலைமுறையினர். “ஒரு நல்ல மேலாளர் என்பவர் தனது குழுவில் உள்ள அனைவரின் நிறை குறைகளை நன்கு தெரிந்திருக்க வேண்டும். பிரச்னைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.
உதாரணமாக அலுவலகம் வரும் போது மழையில் மாட்டிக்கொண்டேன் தாமதமாகும் என்று ஊழியர் கூறினால், அது உண்மையா பொய்யா என்று சரியாக கணித்து உரிய தீர்வை வழங்க வேண்டும்.
அவர்களின் கருத்துகளை திணிப்பவராக மேலாளர் இருக்கக் கூடாது. சம்பள உயர்வு, பதவி உயர்வு குறித்த அப்ரைசல் கூட்டங்களில் என்னைப் பற்றிய குறைகளை கூறலாம், ஆனால் அவை நியாயமானதாக உண்மையானதாக இருக்க வேண்டும்.
அப்போது தான் நான் என் வேலையில் திருத்தங்களை செய்து முன்னேற முடியும். தனக்குப் பிடித்தவருக்கு மட்டும் சாதகமாக இருக்கக் கூடாது” என்கிறார் க்ருதிக்.
வேலையில் கற்றுக் கொள்ளும் திறன்
“நான் பணி செய்யும் நிறுவனத்தில் 2019-ம் ஆண்டு ஒரு இளைஞர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். டெஸ்லா காரின் தானியங்கி செயல்பாடுகள் குறித்த ஒரு வேலை ஒன்று அவருக்கு தரப்பட்டது. அது ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய, கிட்டத்தட்ட டேட்டா எண்ட்ரி போன்ற வேலையே.
வந்த மூன்றாவது நாளில் இது என்ன வேலை, இதில் கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லை என்று கூறி ஒரு மாதத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டார். நான் அந்த வேலையை இரண்டு ஆண்டுகளாக செய்து வந்தேன்” என்கிறார் 90ஸ் கிட்ஸான சக்ரவர்த்தி.
ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று அதில் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு என்கிறார் நந்தினி. “ஒவ்வொரு ப்ராஜெக்டும் புதிதாக இருக்க வேண்டும். இவர்கள் இதை மட்டுமே நன்றாக செய்வார்கள் என்று நினைத்து ஒரே மாதிரியான வேலையாக இருந்தால் அந்த நிறுவனத்தில் வளர வாய்ப்புகள் இருக்காது” என்கிறார்.
“எனது வேலை நேரம் எட்டு மணி நேரங்கள் மட்டுமே என்பதால் நானாக சில படிப்புகளை எடுத்து படிக்க முடிகிறது.” என்கிறார் மணிகண்டன்.
டெலாய்ட் ஆய்வில் பங்கேற்ற ஜென் ஜி தலைமுறையை சேர்ந்த பத்தில் ஏழு பேர், வாரத்தில் ஒரு முறை தங்கள் வேலையில் முன்னேறுவதற்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதில் நேரத்தை செலவிடுவதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் மில்லனியல்ஸ் (90ஸ் கிட்ஸ்) 59% பேர் மட்டுமே திறன்களை வளர்த்துக் கொள்வதில் நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
ஜென் ஜி தலைமுறையினர் வளர்க்கப்பட்ட விதம் அவர்களின் அணுகுமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மனநல ஆலோசகர் ஆர்.அர்ச்சனா.
“ஜென் ஜி தலைமுறையினர் அனைத்தையும் கேள்வி கேட்கப் பழகியுள்ளனர். ஆனால் 90ஸ் கிட்ஸ் அப்படி வளர்க்கப்படவில்லை. அலுவலகங்களில், குடும்பங்களில் பல விசயங்களை அனுசரித்து செல்வார்கள்.
ஆனால் ஏன் அனுசரித்து செல்ல வேண்டும் என்ற கேள்வியை ஜென் ஜி தலைமுறையினர் எழுப்புகின்றனர். இந்த கேள்விக்கு பெற்றோர்களாலோ, சமூகத்தாலோ பதில் அளிக்க இயலவில்லை,
அல்லது அவர்களுக்கு கிடைக்கும் பதில் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஜென் ஜி தலைமுறையினர் திருமணம், வேலை, குடும்பம், உறவுகள், நிதி மேலாண்மை என எல்லாவற்றிலும் தங்களுக்கு எது வேண்டும், வேண்டாம் என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் உணர்வு ரீதியான முதிர்ச்சி இல்லை. தாங்கிக் கொள்ளும் திறன், மீண்டெழும் சக்தி 90ஸ் கிட்ஸ்களிடம் அதிகம் காண முடிகிறது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு