கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் அமைப்பினர் பாதுகாப்புத் தடைகளை மீறி, 1,200 வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று, 250க்கும் மேற்பட்ட மக்களை பிணைய கைதிகளை கடத்திச் சென்றதை தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது தாக்குல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பிணையகைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதில் அந்த பகுதியில் பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்ததை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறினர்.
போரின் போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் அகதிகள் மீதும் இஸ்ரேல் ராக்கெட் லான்ஜர் மூலம் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் அளித்து இருந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் அந்த பகுதியில் இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறி இருந்தது.
இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தரும் மற்ற நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. அதன்படி லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லாக்கள் மீதும் மற்றும் ஏமன் நாட்டின் ஹைத்திகள் மீதும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். சுமார் 15 மாத காலமாக நீடித்த இந்த போரின் காரணமாக இது வரை 46,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்ற தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரு தரப்பினரும் பிணைய கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டுள்ளனர்.