“One Love” என்ற வாசகமும் அதிலிருக்கும் வானவில் கொடியும் LGBTQ உரிமைகளை வெளிக்காட்டும் சின்னம்.
ஒவ்வொரு அணிகளும் போட்டித் துவங்கும் முன், விளையாடும் பதினோரு பேர்கள் மட்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது அனைத்து ஜெர்மானிய வீரர்களும் தங்கள் கைகளால் வாயை மூடியவாரு எடுத்துக் கொண்டார்கள். அதாவது கத்தாரில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாக உள்ளது, தொழிலாளர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவே அதை எதிர்க்கிறோம் என்கிற தங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட இங்குத் தடை இருக்கிறது என்பதால் இப்படிச் செய்தார்கள்.
உலகக் கோப்பைப் போட்டி என்பது விளையாட்டு வீரர்களின் உணர்வுகளையும் அரசியலையும் வெளிக்காட்டும் இடம் மட்டுமல்ல, ரசிகர்களும் பார்வையாளர்களும் கூட இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டார்கள். பல பார்வையாளர்கள் பாலஸ்தீன நாட்டின் கொடிகளை அரங்கில் தூக்கிப் பிடித்து தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டார்கள்.
ஒரு அரங்கு, கிட்டதட்ட 86 ஆயிரம் பேர். இவர்களில் 99 விழுக்காடு பிரேஸில் அணி ஆதரவாளர்கள். கிட்டத்தட்ட அனைவரும் மஞ்சள் பச்சை நிற உடைகள், பிரேஸில் கொடிகள், முகப்பூச்சுக்கள், மேள தாளங்கள், தொப்பிகள் என அமர்களம். இதெல்லாம் பிரேஸில் நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல, பெரும்பாலும் இந்தியர்கள், அரபியர்கள் இன்னும் பல நாட்டினர்தான் இப்படி பிரேஸில் நாட்டின் கொடி ஏந்தி உற்சாகப்படுத்தினார்கள். ஒவ்வொருமுறை கோல் போஸ்டை நோக்கி உதைக்கப்படும் பந்திற்காகத் தன்னை மறந்து கத்துகிறார்கள். பிரேஸில் அணி வீரன் தள்ளிவிடப்பட்டால் கோவப்பட்டுத் திட்டிக் கொள்கிறார்கள்.