பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தற்போது தெரியவில்லை.
இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விளக்கமளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான சில படங்களை சிபிஎஸ் சரிபார்த்துள்ளது. அவற்றில், எரிபொருள் நிரப்பும் விமானமும் இரண்டு ஹெலிகாப்டர்களும் குஸெஸ்தான் மாகாணத்தின் மேல் தாழ்வாக பறப்பது காணப்படுகிறது. இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை போன்று உள்ளது.
இந்நிலையில், இந்த விமானத்தை இரான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை தெரிந்தது என்ன?
இத்தகவல் முதலில், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தாஸ்னிம் செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா தனது விமானி ஒருவரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராய்ட்டர்ஸ், நியூ யார்க் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களும், அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி இதே தகவலை வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
‘விமானியை உயிருடன் பிடிப்பதே முன்னுரிமை’ – இரான்
இரானின் தெற்கு கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தின் ஆளுநர், “வீழ்த்தப்பட்ட எந்தவொரு அமெரிக்கக் குழுவினரையும் உயிருடன் பிடிப்பதே தங்களது முன்னுரிமை” என்று கூறுகிறார்.
“எதிரிப் படைகளைப் பிடிப்பதில் அல்லது கொல்வதில் வெற்றி பெறுபவர்கள், ஆளுநர் அலுவலகத்தால் சிறப்பாகப் பாராட்டப்படுவார்கள்,” என்று அவர் கூறியதாக ஐஎஸ்என்ஏ செய்தி முகமையின் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க ‘ஊடுருவல்காரரைக்’ கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த மாகாணத்தின் வர்த்தகர்களால் 10 பில்லியன் டோமன்கள் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு