Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வாரந்தோறும் ஜலதோஷம்… நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன வழி?

Share

Doctor Vikatan:  என் மகனுக்கு 20 வயதாகிறது. வாரம் ஒருமுறை அவனுக்கு சளி பிடித்துக்கொள்கிறது. நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பது புரிகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு…. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி 

டாக்டர் குமாரசாமி

கொரோனா காலத்துக்குப் பிறகுதான் மக்கள் நோய் எதிர்ப்பாற்றல் என்ற விஷயம் குறித்துப் பேசவும், அது குறித்து கவலைப்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னையின் பின்னணியில் நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைபாடு தொடர்பான பாதிப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு.  அந்த வகையில், முதலில் உங்கள் மகனுக்கு டிபி (காசநோய்) பாதிப்புக்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என டெஸ்ட் செய்து உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.   

டிபி பாதிப்பு இருந்து, அது கவனிக்கப்படாத பட்சத்தில் ஒருவருக்கு எப்போதும் குறைந்த அளவு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கலாம். 

இருமல்

சிலருக்கு சைனஸைட்டிஸ் என்கிற பாதிப்பு இருக்கலாம். அது பூஞ்சைக் கிருமிகளால் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட பாதிப்பிலும் அடிக்கடி சளி பிடிப்பது இருக்கும். இதை உறுதிசெய்யவும் இதிலிருந்து விடுபடவும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும்.

நோய் எதிர்ப்பாற்றல் குறைய இது போன்ற ஏராளமான காரணங்கள் உள்ளன. ஹெச்ஐவி போன்ற தொற்றுகள் உள்ளோருக்கும்  நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து இப்படி அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படலாம். குழந்தைகளை பாதிக்கும் டைப் 1 வகை நீரிழிவு பாதிப்பும் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கலாம். 

குழந்தைக்கு அந்த பாதிப்பு இருப்பதே கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அதன் விளைவாக அடிக்கடி சளி பிடிக்கும், உடல்நலம் பாதிக்கப்படும்.  இப்படி நோய் எதிர்ப்பாற்றலை  வெகுவாகக் குறைக்கும் நோய்கள் பல உண்டு.

நுரையீரல்

எனவே, உங்கள் மகனுக்கு இருக்கும் இந்தப் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய நீங்கள் அவரை நுரையீரல் சிகிச்சை மருத்துவரிடமோ, தொற்றுநோய் சிகிச்சை மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். சரியான காரணமறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பிரச்னை வரும்போதெல்லாம் மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதும், தற்காலிக நிவாரணம் தேடுவதும் சரியான அணுகுமுறை அல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com