Doctor Vikatan: எனக்கு 2 வயது, 2 மாதங்களில் குழந்தை இருக்கிறது. அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஊசி போட்டால் இரண்டு நாள்களுக்கு நன்றாக இருக்கிறாள். மறுபடியும் அவளுக்கு காய்ச்சல் வருகிறது. இது என்ன பிரச்னை… இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.

உங்கள் குழந்தைக்கு 2 வயது, 2 மாதங்கள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த வயது என்பது அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிற வயதுதான். அதாவது, பொதுவாக பாதிக்கிற பல பிரச்னைகளும் இந்த வயதுக் குழந்தைகளுக்கு வரும்.
இப்போதுதான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும். இந்த வயதில் அவர்களது நோய் எதிர்ப்பாற்றலும் குறைவாக இருக்கும். முக்கியமான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை குழந்தைகளுக்குப் போட்டுவிட்டீர்களா என்ற தகவல் இல்லை. முக்கியமாக, டைபாய்டு, ஃப்ளூ போன்றவற்றுக்கான தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள். காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம் காட்டி ஊசி போட்டு சரியாக்கலாம் என நினைப்பதைவிட, தடுப்பூசி போட்டுவிட்டு, காய்ச்சல் வராமல் தடுப்பதுதான் சிறந்தது.

ஊசி போட்டாலும் அடுத்த இரண்டு நாள்களில் மறுபடி காய்ச்சல் வருகிறது என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். உங்கள் குழந்தைக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம்… சைனஸ் பாதிப்பு இருக்கலாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள். குழந்தைகள் நல மருத்துவர்கள் பொதுவாக காய்ச்சலுக்கு ஊசி போட மாட்டார்கள். பொது மருத்துவர்கள்தான் ஊசி போடுவார்கள்.
எனவே, சரியான குழந்தைகள் நல மருத்துவரை அணுகி, உங்கள் குழந்தையின் பிரச்னைகளை விளக்கிச் சொல்லுங்கள். அவர் பரிந்துரைக்கும் டெஸ்ட்டுகளை எடுக்கத் தவறாதீர்கள். தேவைப்பட்டால் உள் நோயாளியாக அட்மிட் செய்தும் சிகிச்சை பெறலாம். இரண்டு வயது என்பது சற்றே சிக்கலான வயது என்பதால், காய்ச்சல் வரும்போதெல்லாம் ஊசி போட்டு சமாளிப்பது என்பது சரியானதல்ல. பிற்காலத்தில் வேறு பிரச்னைகள் ஏற்படாமலிருக்க இப்போதே சரியான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.