Doctor Vikatan: வறண்டு, வெடித்து, ரத்தம் கசியும் உதடுகள்… நிரந்தர தீர்வுதான் என்ன?

Share

என் வயது 28. எனக்கு எப்போதும் உதடுகள் வறண்டும் வெடித்தும் காணப்படுகின்றன. சில நேரங்களில் தோல் உரிந்து ரத்தமே வருகிறது. லிப் பாம், வாசலைன் தடவியும் பலனில்லை. இதற்கு என்ன காரணம்…. தீர்வு என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

உதடுகள் வறண்டுபோகும் இந்தப் பிரச்னைக்கு `கீலைட்டிஸ்’ (Cheilitis) என்று பெயர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சாதாரண ஒவ்வாமை தொடங்கி, நீங்கள் பயன்படுத்துகிற லிப்ஸ்டிக், ஹேர் டை, அழகு சாதனங்கள், கலர் சேர்த்த லிப் பாம் போன்றவற்றின் காரணமாகக்கூட  இந்தப் பிரச்னை ஏற்படலாம். 

சிலருக்கு இயல்பிலேயே உடல், ஒவ்வாமைக்குள்ளாகும் தன்மையோடு இருக்கும். அதை ‘ஏடோபிக் டெர்மடைட்டிஸ்’  (Atopic dermatitis) என்கிறோம். உதாரணத்திற்கு, சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஆஸ்துமா மாதிரியான ஒவ்வாமை பாதிப்புகள் இருக்கலாம். அதன் காரணமாகவும் அவர்களுக்கு வளரும்போது வறண்ட சரும பாதிப்பு தொடரலாம்.

வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படும்போதும்  உதடுகளில் வறட்சியும் வெடிப்புத்தன்மையும் ஏற்படலாம். அந்த நிலையை ‘வெர்மிலியான் பார்டர்’ (The vermilion border) என்று சொல்கிறோம். சிலர் உடல்நல பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் உதடுகளில் வெடிப்பும் வறட்சியும் ஏற்படலாம். முகமும் வறண்டு போகலாம். 

உதடு

உங்கள் விஷயத்தில் உதடுகளின் வறட்சிக்கும் வெடிப்புக்கும் என்ன காரணம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கேற்பவே சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். லிப் பாம் உபயோகிப்பது என்பது ஓரளவு பலனளிக்கும். அளவுக்கதிகமாக வெயிலில் அலைபவர்கள், உதடுகளை அடிக்கடி ஈரப்படுத்திக்கொண்டே இருக்கும் வழக்கம் உள்ளவர்கள் இந்த விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் லிப் பாமும் பெட்ரோலியம் ஜெல்லியும் தற்காலிக தீர்வு தருமே தவிர, முழுமையான நிவாரணம் தராது. மருத்துவரை அணுகி காரணம் அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com