Doctor Vikatan: மண்டையில் வெள்ளைப் படலம், பொடுகா, சொரியாசிஸா.. எப்படித் தெரிந்துகொள்வது?

Share

Doctor Vikatan: எனக்குத் தலையில் பொடுகு அதிகமிருக்கிறது.  தலை முழுவதும் வெள்ளையாகப் படிந்திருக்கிறது.  சில இடங்களில் உப்புக்கல்  மாதிரி இருக்கிறது.  அதைக் கீறிக் கீறி  அகற்றிவிட்டுதான் தலைக்குக்  குளிக்கிறேன். ஆனாலும்,  மீண்டும் மீண்டும் வருகிறது.  முடியும் அதிகமாகக்  கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம்… தீர்வு என்ன?
-Milo Kiru, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

தலையில் வெள்ளைநிறத்தில் காணப்படும் படலம் பொடுகுதானா என்பதை நீங்கள் முதலில் உறுதிசெய்ய வேண்டும். பொடுகு என்பது பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கிற பிரச்னையாக இருக்கிறது. வெயில் காலத்தில் அது அதிகரிக்கும்.  சென்னை போன்ற வெப்ப பகுதிகளில் அது இயல்பாகவே எப்போதும் பாதிக்கும். வெப்பம் அதிகமான பகுதிகளில் வசிப்போருக்கு வியர்வை அதிகமிருக்கும். அதனால் சருமத் துவாரங்களில் எண்ணெய்ச் சுரப்பும் அதிகரிக்கும். அதனால் பொடுகுப் பிரச்னை தீவிரமாகும்.

பொடுகுப் பிரச்னை பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படுவது. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் தலையில் எண்ணெய்ப்பசை அதிகரிக்கும்போது அது அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் அந்த எண்ணெயைச் சாப்பிட வரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் கிருமிகளால் பொடுகுத்தொல்லை வருகிறது. பொடுகு வந்தால் முகத்தில் பருக்கள், முதுகில் பொரிப்பொரியாக வருவது போன்றவை எல்லாம் சகஜமாக வரும்.

ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு வந்திருப்பது சொரியாசிஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதைக் கீறிக் கீறியெல்லாம் அகற்ற முடியாது. இது ஒருவகையான செதில் நோய் பாதிப்பு. பலரும் சொரியாசிஸ் பாதிப்பின் அறிகுறியை பொடுகு என்றே நினைத்துக்கொண்டு, பொடுகு நீக்கும் ஷாம்பூ உபயோகிப்பது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். அது தவறு. சொரியாசிஸ் பாதிப்பாக இருந்தால், அதற்கான காரணம் கண்டுபிடித்து, சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும்.

பலரும் சொரியாசிஸ் பாதிப்பின் அறிகுறியை பொடுகு என்றே நினைத்துக்கொண்டு, பொடுகு நீக்கும் ஷாம்பூ உபயோகிப்பது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். அது தவறு.

சொரியாசிஸ் பாதிப்புக்கு இன்று நிறைய சிகிச்சைகள் வந்துவிட்டன. பிரத்யேக ஷாம்பூக்கள்,  தலையில் தடவக்கூடிய சொல்யூஷன்கள் என எத்தனையோ உள்ளன.  உங்களுடைய பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்துதான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.  இதுபோன்ற பிரச்னைகளை சருமநல மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்று அணுகுவதுதான் சரியாக இருக்கும். பொதுவான அறிவுரைகளோ, தீர்வுகளோ உதவாது. தவிர, பொடுகா, சொரியாசிஸ் பாதிப்பா என்பதையும் சருமநல மருத்துவரால்தான் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியும். எனவே, தாமதிக்காமல் உடனே சருமநல மருத்துவரை அணுகுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com