Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் தழும்புகள் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா… அதற்கான க்ரீம் எந்த அளவுக்கு உதவும்… வேறு எளிய வழிகள் இருந்தால் சொல்லவும்…
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்

முதலில் உங்கள் எடையில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பு சகஜம்தான் என்றாலும் அது ஆரோக்கியமான எடை அதிகரிப்பாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அளவுக்கதிகமாக எடை கூடும்போது, சருமமும் அளவுக்கதிகமாக இழுக்கப்பட்டு, அதன் விளைவாக ஸ்ட்ரெச் மார்க் வரலாம். எனவே அளவுக்கதிக எடை அதிகரிப்பில் கவனம் இருக்கட்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் மிதமான உடற்பயிற்சிகளும் உதவும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்யவும். அதன் மூலம் உங்கள் சருமம் மென்மையாக இருக்கும். மென்மையான சருமத்தில் அவ்வளவு சுலபத்தில் ஸ்ட்ரெச் மார்க் வராது. வறண்ட சருமத்தில்தான் ஸ்ட்ரெச் மார்க் பிரச்னை அதிகம் வரும்.

ஸ்ட்ரெச் மார்க் என்பவை சிலவித ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாகவும் ஏற்படலாம். எனவே உங்கள் உணவில் அனைத்து வைட்டமின்களும் துத்தநாகச் சத்தும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதை எப்படி உறுதிசெய்வது…. ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள், அதிலும் அனைத்து நிறங்களிலும் உள்ளபடி பார்த்துச் சாப்பிடுங்கள். அதுவே உங்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொடுக்கும். இது மிகச்சுலபமான வழியும்கூட.
உங்கள் உணவில் வைட்டமின் சி சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். கொலாஜென் என்பதுதான் சருமத்தை ஆரோக்கியத்துடனும், மீள் தன்மையோடும் வைக்க உதவுவது. இந்த கொலாஜென் உற்பத்திக்கு வைட்டமின் சி சத்து மிக முக்கியம். எனவே வைட்டமின் சி சத்து அதிகமுள்ள எலுமிச்சைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

உங்கள் சருமத்தை வறட்சியில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு தினமும் இருவேளை உங்கள் சருமத்தை மாய்ஸ்ச்சரைஸ் செய்ய வேண்டியது அவசியம். தரமான மாய்ஸ்ச்சரைசர் அல்லது எண்ணெய் அல்லது தழும்பு நீக்கும் க்ரீம் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமலும், அரிப்பின்றியும் இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.