பருமனான கைகள், பெருத்த இடுப்பு என உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்கும் “ஸ்பாட் ரிடக்ஷன்’ (spot reduction) என்பது சாத்தியமே இல்லை. உடலமைப்பு என்பது மரபியல் ரீதியாக அமைவது. நீங்கள் உண்ணும் உணவிலுள்ள கலோரிகளை கணக்கிட்டு, அதைச் சரியான அளவில் வைத்துக்கொண்டு, பிஎம்ஆர் எனப்படும் ‘பேசல் மெட்டபாலிக் ரேட்’டை (Basal Metabolic Rate) சரியாக வைத்துக்கொண்டாலே ஒட்டுமொத்த உடலில் உள்ள கொழுப்பும் ஒரே மாதிரி குறையும்.
அதுவே, உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியை டோன் செய்ய வேண்டும், அதாவது தசைகளை டைட் ஆக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கென பிரத்யேகமான ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகள் உள்ளன. அவற்றைச் செய்யலாம்.
உதாரணத்துக்கு கால்களின் தசைகளை பலப்படுத்த ‘லோயர் லெக் லிஃப்ட்’ ( lower leg lift ) பயிற்சிகள் செய்யலாம். கைகளின் தசைகளை தொய்வின்றி வைத்துக்கொள்ள ஆர்ம் ஸ்ட்ரென்த்தனிங் பயிற்சிகள், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை டைட்டாக்க, ‘அப்டாமினல் க்ரன்ச்சஸ்’ (abdominal crunches) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் உள்ளன. வயிற்றுப் பகுதிக்கான க்ரன்ச்சஸ் பயிற்சிகள், தொப்பையைக் குறைக்கும் என நினைக்க வேண்டாம்.
இந்தியர்களைப் பொறுத்தவரை, தொப்பை என்பது பெருவாரியான மக்களை கவலைகொள்ளச் செய்கிற பிரச்னை. அதற்கான தீர்வு டயட் எனப்படும் உணவுக்கட்டுப்பாடு மட்டுமே. தொப்பையைப் பொறுத்தவரை 80 முதல் 90 சதவிகிதம், உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே குறைக்க முடியும். எனவே, ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.