Doctor Vikatan: நாக்கைப் பிளப்பது, eye tattoo; ஜென் Z-ன் அலங்கார மோகம்… ஆபத்தை அறிவார்களா?

Share

Doctor Vikatan: திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் நடத்தி வந்த டாட்டூ ஸ்டூடியோவில், நண்பருக்கு நாக்கைப் பிளவுபடுத்தும் சிகிச்சையைச் செய்ததாகவும் கண்களுக்குள் டாட்டூ போட்டுவிட்டதாகவும் செய்தி வந்தது.  பாடி பியர்சிங், டாட்டூ உள்ளிட்ட சிகிச்சைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் ஜென் Z தலைமுறையினரிடம் பல விஷயங்கள் பரவி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்ட இந்தச் செய்தியும். நாக்கைப் பிளப்பது, கண்களுக்குள் டாட்டூ போடுவது, உடலின் கண்ட இடங்களில் பியர்சிங் எனப்படும் துளை போட்டுக்கொள்வதெல்லாம் அதிக ஆபத்துகள் நிறைந்த விஷயங்கள்.  மனசாட்சி உள்ள எந்த மருத்துவரும் இத்தகைய விஷயங்களை எல்லாம் ஆதரிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டார். 

கண்களில் போடப்படும் டாட்டூவுக்கு ஸ்கீலர் டாட்டூ (Scleral tattoo) என்றும் ஒரு பெயர் உண்டு. இத்தகைய டாட்டூக்களை போடுவது என்பது அதிகபட்ச ரிஸ்க் நிறைந்தது என்பதை மறக்கக்கூடாது.

அழகுக்காக, ஆசைக்காக போட்டுக்கொள்கிற மற்ற டாட்டூக்களை போல கண்களுக்குப் போடும் டாட்டூவை அலட்சியமாக நினைக்கக்கூடாது. கண்களின் வெள்ளைப் பகுதியில் போடப்படுவதுதான்  ஸ்கீலர் டாட்டூ. ரிஸ்க் நிறைந்த இந்த வகை டாட்டூவில், கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். பார்வை பறிபோகலாம்.  கண்களில் கடுமையான வீக்கம் ஏற்படலாம். கண்களைத் திறந்து பார்க்க முடியாத நிலை ஏற்படலாம். 

கண்களின் வெள்ளைப் பகுதியில் போடப்படுவதுதான் ஸ்கீலர் டாட்டூ. ரிஸ்க் நிறைந்த இந்த வகை டாட்டூவில், கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். பார்வை பறிபோகலாம்.

கண்ணின் வெள்ளைப் பகுதியில் டாட்டூ போடும்போது பக்கத்தில் உள்ள கருவிழியில் பட்டால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். அது மட்டுமல்ல, டாட்டூ செய்த பிறகு கண்களில் ஏதேனும் பாதிப்பு வந்தாலோ, கண் நோய்கள் வந்தாலோ, கண்களைப் பரிசோதிப்பதுகூட சாத்தியமில்லாமல் போகும். டாட்டூ செய்யப் பயன்படுத்தும் கலர் மற்றும் நிறமிகளால் அதிகபட்ச இன்ஃபெக்ஷன் ஏற்படும் அபாயங்களும் உண்டு.

உடலின் மற்ற இடங்களில் டாட்டூ போட்டுக்கொள்ள நினைத்தால், அதைப் பாதுகாப்பாகச் செய்ய நிபுணர்கள் இருக்கிறார்கள். டாட்டூ போடப்படும் இடம், போடும் நபரின் திறமை மற்றும் அனுபவம், டாட்டூ போடப் பயன்படுத்தும் ஊசி, இங்க் உள்ளிட்ட பொருள்களின் தரம் என அனைத்தையும் ஒருமுறைக்குப் பல முறை தெரிந்துகொண்டே போட்டுக்கொள்ள வேண்டும். பாடி பியர்சிங்கோ, டாட்டூவோ… எதையும் உடலின் சென்சிட்டிவ்வான பகுதிகளில் செய்துகொள்வது கொஞ்சமும் பாதுகாப்பானதல்ல. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com