Doctor Vikatan: நடக்கும்போது மூச்சுவிடுவதில் சிரமம்; என்னவாக இருக்கும்?

Share

என் வயது 63. காலையில் எழுந்ததும் கொஞ்ச நேரம் நடந்தாலும் மூச்சுவிட முடியாமல் போவது ஏன்? எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு.

– மஸ்தான் முகமது ஹுசேன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.

“காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடந்தாலே மூச்சுவிட முடியவில்லை என்ற உங்கள் பிரச்னைக்கு உங்கள் உடல்நலம் குறித்த மற்ற விவரங்கள் தெரியாமல் எதையும் விளக்கமாகச் சொல்ல முடியாது. சிகரெட் பழக்கம் உண்டு என்று குறிப்பிட்டிருப்பதால் ஒருவேளை உங்களுக்கு க்ரானிக் பிரான்கைட்டிஸ் (Chronic bronchitis) அல்லது சிஓபிடி (Chronic obstructive pulmonary disease -COPD)எனப்படும் நுரையீரல் பாதிப்புகள் இருக்கலாம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்யும்போதோ, வேறு உடலியக்கத்தின்போதோ மூச்சிரைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு நீரிழிவோ, ரத்த அழுத்த பாதிப்போ இருக்கிறதா என்று தெரியவில்லை.

ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் இப்படி காலையில் சிரமமாக உணரும் நிலை இருக்கலாம். காலையில் நடக்கும்போது ஹைப்பர்டென்ஷன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம்.

புகைப்பழக்கம் உள்ளவர் என்பதால் உங்கள் இதய ஆரோக்கியத்தையும் பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் இதயத்தின் சுருங்கிவிரியும் தன்மையில் பிரச்னைகள் இருந்தாலும் இப்படி மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் விஷயத்தில் உங்கள் வயது, உங்கள் புகைப்பழக்கத்தை மட்டும் வைத்துப் பார்க்காமல் உங்களுக்கு இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிற இணைநோய்கள் என எல்லாவற்றையும் பார்த்துதான் உங்களுக்கான சிகிச்சைகளைப் பரிந்துரைக்க முடியும். எக்கோ மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் தேவைப்படும்.

Smoking

நீங்கள் உடனடியாக பொது மருத்துவரை அணுகி ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதோடு அவரJ பரிந்துரையின் பேரில் மேற்குறிப்பிட்ட டெஸ்ட்டுகளை எடுத்துப் பாருங்கள். மூச்சுவிடுவதில் சிரமத்தை உணரும்போது நடப்பதைத் தவிர்க்கவும்.”

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com