Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?

Share

Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், கணவர் என எல்லோரும் நீரிழிவு நோயாளிகள். தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் அதைச் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியாது.  `எப்போதாவது ஒருநாள்தானே சாப்பிடுகிறோம்… சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்ட்ராவாக ஒரு சுகர் மாத்திரை போட்டுக்கொண்டால் போதும்…’ என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது. இப்படி இனிப்பு சாப்பிடுகிற அன்று கூடுதலாக சுகர் மாத்திரை போட்டுக்கொள்வது சரியானதா… சர்க்கரை நோயாளிகள் இனிப்பே சாப்பிடக்கூடாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

சண்முகம்

என்றோ ஒரு நாள் ஒரே ஒரு துண்டு ஸ்வீட் சாப்பிட்டாலும் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவே செய்யும். அப்படி அதிகரித்த ரத்தச் சர்க்கரை அளவானது குறைவதற்கு இரண்டு, மூன்று நாள்களாவது ஆகும். அப்படியானால் சர்க்கரை நோயாளிகள், பண்டிகை நாள்களில்கூட இனிப்பே சாப்பிடக்கூடாதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

நியாயமான கேள்விதான்… அப்படிப்பட்ட நாள்களில் நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் உணவை, அது சாதமோ, சப்பாத்தியோ, அதன் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக்கொண்டு, கூடவே நிறைய காய்கறிகள் வைத்துச் சாப்பிடுவதோடு, ஆசைக்கு ஒரு துண்டு ஸ்வீட்டும் சாப்பிடலாம். ஆனால்,  இந்த அட்வைஸ், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்போருக்கு மட்டும்தானே தவிர, எல்லோருக்குமானது அல்ல.

காய்கறி பொரியல்

அதாவது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவு குறைவாகவும் நார்ச்சத்தின் அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஒரு ஸ்வீட்டோ, ஒரு கப் பாயசமோ சாப்பிட்டுவிட்டு ஒரு மாத்திரை எக்ஸ்ட்ரா போட்டுக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவு ஏறாது என நினைப்பதும் தவறானது.

உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிட்டு, அதற்கேற்ற மருந்துகளை, அதற்கேற்ற வேளைகளுக்கே உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். அந்த அளவை நீங்களாக அதிகரிப்பதோ, குறைப்பதோ, மாற்றுவதோ சரியானதல்ல. அது உங்கள் உடலில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோய்

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், இனிப்பு சாப்பிட விரும்புவோர், வீட்டில் தயாரிக்கும் இனிப்புகளை மட்டும் சாப்பிடவும். கடைகளில் வாங்குவதையோ, கல்யாண வீடுகளில் பரிமாறப்படுவதையோ சாப்பிட வேண்டாம். அவற்றில் சேர்க்கப்படும் பொருள்களின் அளவு, தரம் போன்றவை நமக்குத் தெரியாது என்பதால் வீட்டுத் தயாரிப்புகள் மட்டுமே பாதுகாப்பானவை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com