Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Share

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக  மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு  மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வருமா…? சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்களே… இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

ப்ரீ டயாபட்டீஸுக்கும் வாழைப்பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவோர் எல்லாம் ப்ரீ டயாபட்டிக்காக மாறுவதில்லை. ப்ரீ டயாபட்டிக்காக இருக்கும் எல்லோரும் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவோராகவும் இருப்பதில்லை.

டயாபட்டீஸ் என்பது உடலின் வளர்சிதை மாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. மலச்சிக்கல் பிரச்னைக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மலச்சிக்கல் இருந்தால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாக நம் மனதில் பதிந்து போன விஷயமாக இருக்கிறது. ஆனால், மலச்சிக்கலுக்கான காரணத்தை முதலில் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அதன் பிறகு தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. 

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே சிரமமின்றி மலம் வெளியேறும்.  மலச்சிக்கலுக்கு தினமும் வாழைப்பழம் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

(pre-diabetes)

இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கேற்ற உடல் உழைப்பைக் கொடுக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்.  அதைத் தவிர்த்து வாழைப்பழம் சாப்பிட்டதால் சுகர் வந்துவிட்டதாகச் சொல்வதில் அர்த்தமும் இல்லை, அறிவியல்பூர்வமான உண்மையும் இல்லை. 

உடல் இயக்கம் சார்ந்த பிரச்னையான நீரிழிவு என்பது நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வயது போன்ற விஷயங்களால் தீர்மானிக்கப்படுவது. வாழைப்பழத்தை நிறுத்தியபிறகு டெஸ்ட் செய்ததில் சுகர் இல்லை என்று வந்ததாகச் சொல்லியிருப்பது நல்ல விஷயம். நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். மலச்சிக்கலுக்கான காரணம் தெரிந்து, அதற்கும் சிகிச்சை எடுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com