Doctor Vikatan: தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மாமனார்: முதுமைதான் காரணமா… சிகிச்சை அவசியமா?

Share

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. மாமியாரும் அவரும் தனியே வசிக்கிறார்கள்.  சமீப காலமாக என் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்.  வெளியே செல்லும்போதும் இதைச் செய்கிறார். மறைந்திருந்து பார்த்துவிட்டு விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லையே என மறுக்கிறார். சிறிது நேரத்தில் மீண்டும் அதையே செய்கிறார். இதற்கு ஏதேனும் சிகிச்சை தேவையா? இதை நிறுத்த முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

வயதான காலத்தில் உடலின் அனைத்து பாகங்களும் சுருங்கும். அதில் மூளையும் அடக்கம்.  உங்கள் மாமனாருக்கு 75 வயது என்கிறீர்கள். இந்த வயதில் அவருக்கும் உடல், மூளை சுருங்குவது இயல்பாகவே நடக்கும். டிமென்ஷியா என்கிற மறதி பாதிப்பும் வரலாம். தனக்குத்தானே பேசிக்கொள்வதும் நடக்கலாம். இது நீங்கள் பயப்படுகிற அளவுக்குப் பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. சின்னக் குழந்தைகள் தமக்குத்தானே பேசிக்கொள்வார்கள்… நம்மில் பலரும் நமக்கு நாமே பாடிக்கொள்வோம். பாத்ரூமில் பாடுவோம். அதையெல்லாம் நார்மல் என்றே எடுத்துக்கொள்கிறோம். 

அதே மாதிரிதான் உங்கள் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்வதையும் பிரச்னையாகப் பார்க்க வேண்டியதில்லை. பாட வராதவர்கள் பேசிக் கொள்வார்கள். போரடிக்கும்போது எதையாவது பேசி சிரித்துக்கொள்வார்கள். இதையெல்லாம் பெரிதுபடுத்தி, உடனே ஏதோ பிரச்னை என பயந்து, சிகிச்சை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.  அவரை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிடுங்கள். அவரது செய்கை மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதவரை அது குறித்து யோசிக்கவும் வேண்டாம். வயதான காலத்தில் எதையோ நினைத்து முணுமுணுப்பதும் தனக்குத்தானே பேசிக் கொள்வதும் மிக மிக நார்மலான விஷயம்தான். 

தனிமை காரணமாகவும் பேச்சுத்துணைக்கு ஆளில்லாத காரணத்தாலும்கூட அவர் தனக்குத்தானே பேசிக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் ‘செல்ஃப் ஸ்டிமுலேட்டரி பிஹேவியர்’ ( Self-stimulatory behaviour) என்று சொல்வார்கள். குழந்தைகள் கைசப்புவதைப் போன்றது எனலாம்.  தனிமை காரணமாகவும் பேச்சுத்துணைக்கு ஆளில்லாத காரணத்தாலும்கூட அவர் தனக்குத்தானே பேசிக் கொள்ளலாம். இந்த வயதில் அவருடன் அமர்ந்து பொறுமையாக உரையாடல் நிகழ்த்தவோ, அதைப் புரிந்துகொண்டு அவரும் பதிலுக்கு உரையாடவோ அவரது மூளை இடம்கொடுக்காமல் இருக்கலாம். அதனால் செல்ஃப் ஸ்டிமுலேட்டரி பிஹேவியர் என்ற அடிப்படையில் அவர் தனக்குத்தானே எதையோ பேசிக் கொண்டிருப்பார். இதை பிரச்னையாக நினைத்து மருந்து, மாத்திரைகள் கொடுப்பது இந்த வயதில் அவருக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com