Doctor Vikatan: இன்று அனேக வீடுகளில் தரைக்கு டைல்ஸ்தான் போடுகிறார்கள். ஆனால், டைல்ஸ் போட்ட தரை பலருக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. பாதவெடிப்பில் தொடங்கி, மூட்டுவலி, பாதவலி என பல பிரச்னைகள் வருகின்றன. உண்மையிலேயே டைல்ஸ் தரைக்கும், இதுபோன்ற வலிகளுக்கும் தொடர்பு உண்டா… டைல்ஸ் தரை போடப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

மனிதர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய உடலியக்கங்களில் முக்கியமானது நடை. இந்த இயக்கத்துக்கேற்ப நம் கால்களின் அமைப்பானது, வளைவுகள், நடகும் மேல் பரப்பு, வயது போன்றவற்றைப் பொறுத்து மாறும்.
நம் பாதங்களில் 26 எலும்புகளும், 33 மூட்டுகளும், நிறைய குட்டிக்குட்டி தசைகள் மற்றும் தசைநார்கள் இருக்கும். இவை, நாம் நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை உறிஞ்சி, ஆற்றலைச் சேமித்து, எடையைத் திறமையாக விநியோகிக்கும் வேலையைச் செய்கின்றன. இந்த வேலை சரியாக நடக்க, நாம் நடக்கும் தரையின் பரப்பும் முக்கியம். கான்கிரீட், டைல்ஸ் போன்ற ரொம்பவும் கடினமான மேற்பரப்புகள் நடக்கும்போதான அழுத்தத்தைப் பல மடங்கு அதிகரிக்கும். கால்களால் அதிக அழுத்தம் உணரப்படும். சின்னச் சின்ன காயங்கள் ஏற்பட்டு, குதிகால் வலி, கால்களில் வலி போன்றவை அடிக்கடி ஏற்படலாம்.
அதே சமயம், புல், மென்மையான மிதியடி போன்றவை, பாதங்களில் ஏற்படும் அழுத்தத்தை நன்றாகக் குறைக்கும். ஆனால், அந்தத் தரைபரப்பு மென்மையாக இருப்பதால், நடை தடுமாறி, பேலன்ஸ் இல்லாமல் போய்விடாமலிருக்க, சமநிலையைத் தக்கவைக்க தசைகள் அதிகம் வேலை செய்யும். சமதளமற்ற மணல், பாறை போன்றவற்றில் நடப்பது பாதங்களை வலுப்படுத்தும். அதே சமயம், சுளுக்கு போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

யார், எதில் நடப்பது சரி என்று பார்த்தால், குழந்தைகளைப் பொறுத்தவரை வெவ்வேறு பரப்புகளில் நடப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அதுதான் அவர்களின் பாதங்களின் தசைகள், எலும்புகள், மூட்டுகளை இயக்க உதவும். ஆனால், நாள்பட்ட மூட்டுவலி உள்ள பெரியவர்கள், கடினமான தரைப்பரப்பில் நடக்கும்போது, பிரத்யேக செருப்பு அணிய வேண்டியது அவசியம். அந்தக் காலணிகள், அதிர்வு அலைகளை உறிஞ்சிக் கொள்வதால், கடினமான தரை மூலம் வரக்கூடிய வலி மற்றும் வலுவிழப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
தட்டைப் பாதங்கள் இருந்தால் தரைப்பரப்பின் காரணமாக வரும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே, நம் பாதங்களின் தன்மை தெரிந்து அதற்கேற்ப நடப்பதுதான் பாதங்கள் மற்றும் கால்களில் பிரச்னை இல்லாமல் பாதுகாப்பாக வைக்கும். எனவே, உங்கள் விஷயத்தில் மருத்துவரை அணுகி, கால் வலிக்கு டைல்ஸ் தரைதான் காரணமா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, தேவைப்பட்டால் பிரத்யேக காலணிகள் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.