Doctor Vikatan: சொத்தை இல்லை, ஆனாலும் பற்களின் இடையே மாட்டும் உணவு… காரணமும் தீர்வும் என்ன?

Share

Doctor Vikatan: எனக்கு வயது 30. பற்களில் சொத்தை இல்லை. ஆனால் சில பற்களுக்கு நடுவில் இடைவெளி இருப்பதால் நார் பொருள்கள், பருப்பு வகைகளைச் சாப்பிட்ட பிறகு சிக்கிக்கொள்கின்றன. அதை எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். இதற்குத் தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்

பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை

முதலில் பற்களுக்கு இடையிலான இடைவெளிக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு பரம்பரையாக பல்வரிசை அப்படித்தான் அமைந்திருக்கிறதா அல்லது சொத்தைப் பல்  காரணமாகவோ, பல் உடைந்ததால்  இடைவெளி வந்திருக்கிறதா அல்லது  உங்களுடைய பற்கள் எல்லாமே அளவில் சிறியதாக இருந்து, தாடை அமைப்பு பெரிதாகவும் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

அதற்கடுத்தபடியாக எல்லா பற்களின் இடையிலும் இடைவெளி இருக்கிறதா அல்லது முன்வரிசைப் பற்களில் மட்டும் இருக்கிறதா என்றும், அந்த இடைவெளி எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். இடைவெளியின் அளவைப் பொறுத்து, அதைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் முடிவு செய்யப்படும்.  ‘டைரக்ட் பாண்டிங்’ என்ற முறையில் காம்போசிட்  என்ற பொருளை உபயோகித்து, பற்களின் இடைவெளியை நிரப்புவோம். சொத்தைப் பல்லுக்குக்கூட முதலில் சொத்தையை அகற்றிவிட்டு, இடைவெளியை இந்த முறையில்தான் நிரப்புவோம்.  இதன் மூலம் பற்களுக்கு இடையில் உணவுத்துகள்கள் மாட்டிக்கொள்வது தவிர்க்கப்படும்.

பற்கள்

ஆர்த்தோடாண்டிக்ஸ் எனப்படும் பிரேசஸ் பொருத்துவது மற்றொரு தீர்வு. உலோகம் அல்லது செராமிக் பிரேசஸை பொருத்துவோம். இடைவெளி மிக அதிகமாக இருக்கும்போதும், பற்களின் அளவு சிறியதாகவும் தாடையின் அமைப்பு பெரிதாகவும் இருக்கும்போதும் இந்த முறையில் சரிசெய்யலாம். நேராக இருக்க வேண்டிய பல் திரும்பிருந்தாலும் பற்களின் இடையில் இடைவெளி இருக்கும். சரியான வரிசையில் இருக்காது. அதற்கும் ஆர்த்தோடாண்டிக்ஸ் சிகிச்சை உதவும். இது ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் வரை நீளும் சிகிச்சை.

‘அலைனர்ஸ்’ எனப்படும் இன்விசிபிள்  கிளிப் பொருத்துவது இன்னொரு தீர்வு. பற்களின் மேல்  கவர் செய்கிறமாதிரி  கண்ணுக்குத் தெரியாத கிளிப் பொருத்துவோம்.  இது இடைவெளியைக் குறைக்கும்.  இதைத் தக்கவைக்க இறுதியாக ‘ரீடெயினர்ஸ்’ என்ற ஒன்றையும் பொருத்துவோம். 

அடுத்து  ‘வெனீரிங்’ என்ற அழகு சிகிச்சை பிரபலமாகி வருகிறது.  இதில் காம்போசிட் வெனீரிங், பார்சலின் வெனீரிங் என இரண்டு வகை உண்டு. வெனீரிங் செய்வதற்கு முன்,  நன்றாக உள்ள பற்களை லேசாகத் தேய்த்து அதன் பிறகுதான் வெனீரிங் சிகிச்சை செய்ய முடியும் என்பது இதிலுள்ள மைனஸ். கடினமான உணவுகளைக் கடிக்கும்போது வெனீரிங் செய்யப்பட்ட பல் உடைய வாய்ப்பு உண்டு.  பார்சலின் வெனீரிங் முறையில் பெரிய இடைவெளியை நிரப்பலாம்.  காம்போசிட் வெனீரிங்கைவிட இது இன்னும் உறுதியானது. பார்க்கவும் அழகாக இருக்கும்.

சிலருக்கு பற்கள் உடைந்து இடைவெளி விழுந்திருக்கும். பற்கள் நீக்கப்பட்ட இடம் அடைக்கப்படாமல் இருக்கும். இதனால் இடைவெளியும் அதிகம் தெரியும், உணவுப்பொருள்களும் மாட்டிக்கொள்ளும். பக்கத்திலுள்ள பற்கள் சாயத் தொடங்கும்.  இந்த நிலையில் பற்களுக்கு மேல் தொப்பி போன்று பொருத்துவதன் மூலம் முழுப் பற்களையும் அழகாக்கலாம். பல்லும் உறுதியாக இருக்கும். சாப்பிடுவது, பேசுவது என எந்தச் செயலும் பாதிக்கப்படாது. எனவே  பற்களில் இடைவெளி ஏற்படும்போது அதற்கான காரணம், அதன் அளவு, எத்தனை இடங்களில் இடைவெளி இருக்கிறது என்றெல்லாம் பார்த்துவிட்டுதான் சிகிச்சையை முடிவு செய்ய முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com