உங்கள் விஷயத்தில் ஒரு பக்க காது கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கான காரணம் தெரிந்தால்தான், அதே காரணத்தால் இன்னொரு பக்க காதும் பாதிக்கப்படாமல் தடுப்பது சாத்தியமா என்று பார்க்க முடியும்.
உதாரணத்துக்கு இன்ஃபெக்ஷன் காரணமாக ஒரு காது கேட்காமல் போயிருக்கும் சூழலில், அதே காரணத்தால் இன்னொரு காதும் கேட்காமல் போகாது. ஆனால் ஏற்கெனவே கேட்கும் திறனை இழந்த காதை சரி செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.
காது ஜவ்வில் ஓட்டை இருந்தாலும் காது கேட்காது. அடிக்கடி சளி பிடிப்பதால் சிலருக்கு காதுக்குள் சளி போன்று தேங்கி இருந்தாலும் காது கேட்காமல் போகலாம். நரம்பு பாதிப்பு தவிர பெரும்பாலானவை சரிசெய்யக்கூடிய காரணங்கள். மருந்து, மாத்திரைகளாலோ, அறுவை சிகிச்சையாலோ சரிசெய்துவிட முடியும்.
எனவே உங்கள் விஷயத்தில் நீங்கள் இ.என்.டி மருத்துவரை நேரில் பார்த்து பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரிசெய்ய முடியாத பிரச்னை என்று மருத்துவர் சொன்னால், கடைசி தீர்வாக ஹியரிங் எய்டு உபயோகிப்பது பற்றி யோசிக்கலாம்.