கொலாஜென் உற்பத்தி சீராக இருந்தால்தான் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுகளில் வலி வராமல் இருக்கும். கொலாஜென் என்பது உணவின் மூலமும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கப் பெறாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் பரிந்துரையோடு தரமான கொலாஜென் சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது எந்தப் பக்க விளைவும் வராது.
உணவு என்று பார்த்தால் அசைவத்தில்தான் கொலாஜென் பிரதானமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஆட்டுக்கால் சூப், சிக்கன் சூப் போன்றவற்றில் அது மிக அதிகம். அசைவத்தோடு ஒப்பிடும்போது சைவ உணவுகளில் கொலாஜென் குறைவாகவே இருப்பது உண்மைதான்.


பவுடர் வடிவில், மாத்திரை வடிவில், சிரப் வடிவில்… இப்படிப் பல வழிகளில் எடுத்துக்கொள்ளும்படி கொலாஜென் சப்ளிமென்ட் கிடைக்கிறது.
கொலாஜென் என்பது பெண்களுக்கு மட்டுமன்றி, ஆண்கள், பாடி பில்டர்ஸ் உட்பட, 20 வயதுக்கு மேலான எல்லோருக்கும் தேவை. சப்ளிமென்ட்டாக எடுப்போர், அதை எந்த வடிவத்தில் எடுக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்கான அளவு தீர்மானிக்கப்படும். பவுடர் வடிவில் விரும்புவோர், தினமும் ஒரு சாஷேவை தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம். சிரப் அல்லது கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ள விரும்புவோர், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையின்படி அளவைத் தீர்மானிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.