Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள் தேவையா?

Share

Doctor Vikatan: என் வயது 55. கடந்த வருடம் ஆஞ்சியோ செய்ததில் இதயத்தின் ரத்தக்குழாயில் 50 சதவிகித அடைப்பு இருப்பதாகவும் மாத்திரைகள் மூலமே சமாளிக்கலாம் என்றும் மருத்துவர் சொன்னார்.  இந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் ஆஞ்சியோதான் செய்ய வேண்டுமா? இசிஜி, எக்கோ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமா… இசிஜி, எக்கோ பரிசோதனைகள் நார்மல் என்றால் என் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்  

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

நீங்கள் கேட்டுள்ளபடி, எக்கோ அல்லது இசிஜி பரிசோதனைகளில், உங்களுக்கு ஏற்கெனவே இருந்த அந்த 50 சதவிகித அடைப்பு எப்படியிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது.

ஏற்கெனவே நீங்கள் ஆஞ்சியோ செய்தபோது, உங்களுக்கு இதயத்தின் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்போது மருத்துவர் உங்களுக்கு சில மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சொல்லியிருப்பார்.

ஆஞ்சியோ

உங்களுடைய ரிஸ்க் காரணிகள் எப்படியிருக்கின்றன என்பதையும் கண்காணித்துக்கொண்டிருப்பார். இந்த விஷயங்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட வேண்டியவை.

இவை தவிர, உங்களுக்கு மீண்டும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், இன்னொரு முறை ஆஞ்சியோ செய்யலாம் அல்லது டி.எம்.டி எனப்படும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

டிரெட்மில் டெஸ்ட்

இது குறித்து நீங்கள் உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் இதயநோய் மருத்துவரிடம் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளில், இதயத்தின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதை வேண்டுமானால் சொல்லலாம். ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லலாம். ஆனால், ஏற்கெனவே உள்ள அடைப்பு எப்படியிருக்கிறது என்பதை இந்தச் சோதனைகளில் தெரிந்துகொள்ள முடியாது. எனவே, அது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com