Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Share

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. குடல் தொடர்பாக இப்படி எந்தப் பிரச்னையுமே வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதேனும் உண்டா??

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

மருத்துவர் பாசுமணி

குடல் ஆரோக்கியம் என்பதே அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை நம்பியே உள்ளது. அதிலுள்ள 100 டிரில்லியன்  பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான அளவு நார்ச்சத்து, வெரைட்டியான நார்ச்சத்து, சீசனல் உணவுகள் அவசியம். கோலா பானங்கள், மது போன்றவை கூடாது. 

ஒருநாள் தூக்கம் இல்லாவிட்டால் மறுநாள் சேர்த்துவைத்துத் தூங்குவதைப் போல,  ஒருவேளை  நார்ச்சத்து இல்லாமல் சாப்பிட்டால் அடுத்தவேளை  அதை ஈடுகட்ட வேண்டும். ஃபைபர் டெஃபிசிட் (fibre deficit) எனப்படும் நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், குடலுக்கு கடன்படுவீர்கள். அந்தக் கடனை சேர்க்காதீர்கள். அன்றன்று பேலன்ஸை காலி செய்விட்டு நிம்மதியாகத் தூங்குங்கள்.

தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லது. உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் செரிமானம் பாதிக்கப்படும். இது தவிர்த்து தினமும் 150 முதல் 200 மில்லி நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம். மோரில் உள்ள புரோபயாடிக்ஸ், குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. கெட்டியாக இல்லாமல் நிறைய தண்ணீர் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்த மோர் குடலுக்கு ஆகச்சிறந்த பானம்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கம்புக்கு பெரும்பங்கு உண்டு.  காலை உணவுக்கு இட்லி, தோசைக்கு பதில் மோர் சேர்த்த கம்பங்கூழ் குடிப்பது வயிற்றை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்.

ஒருவேளை நார்ச்சத்து இல்லாமல் சாப்பிட்டால் அடுத்த வேளை அதை ஈடுகட்ட வேண்டும். ஃபைபர் டெஃபிசிட் (fibre deficit) எனப்படும் நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், குடலுக்கு கடன்படுவீர்கள்.

இரவு உணவை சீக்கிரமே சாப்பிடுபவர்களுக்கு  வயிறு தொடர்பான உபாதைகள் வருவதில்லை. அதிகபட்சம் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து சிறிது நடப்பது செரிமானத்தை சீராக்கும்.

வெயில் காலத்தில் பலருக்கும் பசி எடுக்காது. திரவ உணவாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதற்காக கோலா பானங்கள், கார்பனேட்டடு பானங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரையும் கலோரியும்  காற்றும் அதிகம் என்பதால் செரிமானத்தை நிச்சயம் பாதிக்கும். அதற்கு பதில் ஃப்ரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். 

தினமும் குறைந்தது அரை மணி நேரம் ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதற்காக ஜிம்மில் சேர்ந்து ஹெவியான வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் என உங்களுக்கு எது சாத்தியமோ அதைச் செய்யலாம். வியர்வை வெளியேறும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com