டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய வீரர் புஜாரா.
100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் 14 வீரர்களில் ஒருவரான புஜாரா மொத்தம் 103 போட்டிகளில் 43.6 ஆவரேஜில் 19 சதங்கள் 7,195 ரன்கள் குவித்திருக்கிறார்.
இருப்பினும், கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய புஜாரா கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடிவந்தார்.
இந்த நிலையில் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா இன்று ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் புஜாரா, “இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடிக்கொண்டு, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது என அதன் உண்மையான அர்த்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
ஆனால், எந்தவொரு நல்ல விஷயமும் முடிவுக்கு வந்தாக வேண்டும்.
மிகுந்த நன்றியுடன் அனைத்து வடிவிலான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அஸ்வின், கோலி, வரிசையில் தற்போது வெற்றிடமாக இருக்கும் புஜாராவின் இடத்தை யார் நிரப்புவார் என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்!