கடைசியில் எதிர்பார்த்ததை போலவே பிசிசிஐக்கு சாதகமாகத்தான் ஐ.சி.சி முடிவை எடுத்தது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் துபாயில் நடக்குமென்றும் மற்ற போட்டிகளெல்லாம் பாகிஸ்தானில் நடக்குமென பஞ்சாயத்தை பேசி முடித்து பைசல் செய்தது ஐ.சி.சி. பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி என மூன்று நகரங்களிலுள்ள மைதானங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த மைதானங்களில் பராமரிப்புப் பணிகளை செய்யும் வேலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் இறங்கியது. அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது. ஜனவரி 31 க்குள் மைதானத்தின் பராமரிப்புப் பணிகளை முடித்து போட்டிகளை நடத்த ரெடியாக இருக்க வேண்டும் என்பதே ஐ.சி.சியின் எதிர்பார்ப்பு.
ஆனால், இப்போதைய நிலவரப்படி 31 ஆம் தேதி அதாவது நாளைக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் மைதான பணிகளை முடிப்பது அசாத்தியம் என பாகிஸ்தான் ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளன. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என மூன்று நாடுகளும் ஆடும் முத்தரப்பு ஓடிஐ தொடர் நடக்கவிருக்கிறது. அதற்குள்ளும் கூட மைதானங்கள் ரெடியாக வாய்ப்பில்லை எனறே கூறப்படுகிறது. இதனால் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு முழுமையான சௌகரியத்தை கொடுக்கும் வகையில் மைதானங்கள் இருக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன் இருப்பது பெரிய சவால். ஐ.சி.சி என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!