இந்த நிலையில், தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், “நீங்கள் முன்பு பார்த்த கருண் நாயர் அல்ல இப்போது தெரிவது. மயங்க் அகர்வால் (விஜய் ஹசாரே டிராபி தொடரில் கர்நாடக அணி சார்பாக 4 சதங்கள் உட்பட 619 ரன்கள்) கூட நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏறக்குறைய தயாராகிவிட்டது. பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவதில்லை.
அதேசமயம், கருண் நாயரை அணிக்குள் எடுக்கும் விஷயமும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால். சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவர் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், அவர் இதே வேகத்தில் சென்றால், ஏன் கூடாது என்ற கேள்வியும் வரும். அவர் சிறப்பான வீரர். அவரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இடம் பெறுவார் என்று கூறிய தினேஷ் கார்த்திக், “இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மிக நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதால் அவருக்கு ஓய்வு தேவை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது எளிதானதல்ல. தேர்வுக்குழுவினர் சரியானதைச் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் 100 சதவிகிதம் ஜெய்ஸ்வால் இருப்பார்.” என்றார்.