எடிஹாட் ஸ்டேடியத்தில் நடந்த மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் மொத்தம் 7 கோல்கள் அடிக்கப்பட்டன. தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டுக்கொண்டே இருந்த மான்செஸ்டர் சிட்டி இந்த முதல் லெக் போட்டியை 4-3 என்று வென்றிருக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான காலிறுதியின் 2 சுற்றுகளில் சேர்ந்தே மான்செஸ்டர் சிட்டியால் 1 கோல் தான் அடிக்க முடிந்திருந்தது. ஆனால், ரியல் மாட்ரிட் அணிக்கெதிராக 90 நொடிகளிலேயே முதல் கோலை அடித்தது அந்த அணி. இந்த கோலையும் அத்லெடிகோவுக்கு எதிராகக் கோலடித்த கெவின் டு புருய்னா தான் அடித்தார். வலது விங்கில் இருந்து மாரெஸ் கொடுத்த கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் டி புருய்னா.

போட்டியின் தொடக்கத்திலேயே கோல் வாங்கிய அதிர்ச்சியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் இருக்க, உடனடியாக இரண்டாவது கோலையும் அடித்து பேரதிர்ச்சி கொடுத்தது மான்செஸ்டர் சிட்டி. 11-வது நிமிடத்தில், இடது விங்கிற்கு டி புருய்னா கொடுத்த கிராஸை, சரியாக கிளியர் செய்யாமல் விட்டார் டேவிட் அலாபா. அதைப் பயன்படுத்தி ஆட்டத்தின் இரண்டாவது கோலை அடித்தார் கேப்ரியல் ஜீசுஸ். இந்த கோல்களுக்குப் பிறகும் மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அட்டாக் செய்துகொண்டே இருந்தது. 26-வது நிமிடத்தில் அந்த அணிக்கு மூன்றாவது கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெர்னார்டோ சில்வா வலது விங்கில் மாரஸை ரிலீஸ் செய்ய, பந்தோடு பாக்சுக்குள் நுழைந்தார் மாரஸ். இடது விங்கில் ஃபில் ஃபோடன் மார்க் செய்யப்படாமல் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவருக்குப் பாஸ் கொடுக்காமல் தானாக அந்த ஷாட்டை அடித்தார் மாரஸ். அது கோல் போஸ்ட்டுக்கு வெளியே செல்ல, மூன்றாவது கோல் அடிக்கும் வாய்ப்பு நழுவியது.
மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், 33-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் ஒரு கோல் அடித்தது. இடது விங்கில் இருந்து ஃபுல் பேக் மெண்டி ஒரு கிராஸை பாக்சுக்குள் அனுப்பினார். வலது விங்கில் இருந்து வந்த ஸ்டிரைக்கர் கரிம் பென்சிமா, மான்செஸ்டர் சிட்டி டிஃபண்டர் ஜின்சென்கோவை ஏமாற்றி ‘வாலி’ ஷாட் அடித்து அதை கோலாக்கினார். அதனால், மான்செஸ்டர் சிட்டியின் முன்னிலை ஒன்றாகக் குறைந்தது. அடுத்த நிமிடமே இளம் ரியல் மாட்ரிட் விங்கர் ராட்ரிகோ, கோல் நோக்கி ஒரு ஷாட் அடித்தார். ஆனால், அதை மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சன் தடுத்துவிட்டார். முதல் பாதியில் 2-1 என்ற முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி.

கடந்த வாரம் நடந்த லா லிகா போட்டியில் காயமடைந்திருந்ததால், அலாபாவால் சிறப்பாக விளையாட முடியவில்லை. மான்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலுக்கு காரணமாக அமைந்த அவர், தொடர்ந்து இந்தப் போட்டியில் தடுமாறினார். அதனால், இரண்டாவது பாதியில் அவருக்குப் பதில் நாசோ களமிறங்கினார். இரண்டாவது பாதியின் தொடக்கத்திலும் மான்செஸ்டர் சிட்டி கோல் அடித்திருக்கும். வலது விங்கில் இருந்து பந்தோடு முன்னேறி கோல் நோக்கி அடித்தார் மாரஸ். ஆனால், அது இரண்டாவது போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. ரீபௌண்ட் ஆன பந்தை அங்கிருந்து ஃபில் ஃபோடன் மீண்டும் கோல் நோக்கி அடித்தார். ஆனால், அதை பிளாக் செய்துவிட்டார் நாசோ. இருந்தாலும் அடுத்த 7 நிமிடங்களில் மான்செஸ்டர் சிட்டியின் மூன்றாவது கோலை அடித்தார் ஃபோடன். இடது விங்கில் பந்தோடு முன்னேறிய ஃபெர்னாண்டினியோ, பாக்ச்சுக்குள் கிராஸை அனுப்ப, அதை ரியல் மாட்ரிட் டிஃபண்டர்களுக்கு நடுவே புகுந்த ஃபோடன் ஹெட்டர் மூலம் கோலாக மாற்றினார்.
ஆனால், அந்த கோல் விழுந்த அடுத்த 2 நிமிடங்கிளேலேயே கோலடித்தது ரியல் மாட்ரிட். இடது விங்கிலிருந்து பந்தோடு முன்னேறினார் வினிசியஸ் ஜூனியர். தொடர்ந்து ஒவ்வொரு மான்செஸ்டர் சிட்டி வீரராகத் தாண்டியவர், பாக்சுக்குள் நுழைந்து பந்தை போஸ்ட்டுக்குள்ளும் அனுப்பினார். ஆட்டம் 3-2 என்றானது. ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி நான்காவது கோலை அடித்தது. இடது விங்கில் பந்தோடு முன்னேறிய ஜின்சென்கோ, டோனி குரூஸால் ஃபவுல் செய்யப்பட்டார். நடுவர் ஃப்ரீ கிக் கொடுத்துவிடுவார் என்று ரியல் மாட்ரிட் வீரர்கள் அலட்சியமாக நிற்க, அட்வான்டேஜ் கொடுத்துவிட்டார் நடுவர். அப்படியே பாக்சுக்குள் இருந்த பந்தை கோல் நோக்கி பெர்னார்டோ சில்வா அடிக்க, அது கோலானது. அதனால், 4-2 என முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி.

மீண்டும் சில நிமிடங்களிலேயே ரியல் மாட்ரிட் பதில் கோல் திருப்பியது. 80-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு வலது விங்கில் ஃப்ரீ கிக் கிடைத்தது. பாக்சுக்குள் அனுப்பப்பட்ட அந்த பந்தை கிளியர் செய்ய முற்பட்ட ஆய்மெரிக் லபோர்ட், அதை ஹெட் செய்தார். அவர் தலையில் பட்டு அவர் கையிலேயே பந்து பட, பெனால்டி கொடுக்கப்பட்டது. அதை கோலாக மாற்றினார் பென்சிமா. முன்னிலையை மீண்டும் ஒன்றாகக் குறைத்தது ரியல் மாட்ரிட். இதன் பிறகு வேறு கோல்கள் விழாததால் ஆட்டம் 4-3 என முடிந்தது. இந்த அரையிறுதியின் இரண்டாவது சுற்று ஆட்டம் மே 4-ம் தேதி நடக்கிறது.