தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்

கடந்த கால வரலாறு கலை அரசியல் பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு நமக்கு ஆவணங்களாக இருப்பது இதழ்களே. அப்படியான வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் அவர்களை மையமாக வைத்து இதழியல் வரலாற்றை எழுதியுள்ளார் ஜெ. பாலசுப்ரமணியம். ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ எனும் நூலில் அம்பேத்கரின் இதழியல் பணிகளையும், 1930க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்கிய உரிமை, உதயசூரியன், தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களைப் பற்றியும் விவரித்து எழுதியுள்ளார்.
பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்

“ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தப்படாமல் சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் பல்வேறு வளர்ச்சிகளை மக்களிடையே கொண்டு வருகிற அரசியலமைப்பு முறையாகும்” என்று கூறியவர் டாக்டர் அம்பேத்கர். ஜனநாயகத்துக்காக இறுதி வரை போராடி, அது குறித்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர் அம்பேத்கர். அப்படி அவர் பேசியவற்றில் 10 உரைகளைத் தொகுத்து, ‘பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்’ என்ற நூலினை நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை முனைவர் க. ஜெயபாலன் மற்றும் முனைவர் பெ. விஜயக்குமார் ஆகியோரும் தொகுத்துள்ளனர்.
கோவில் நுழைவு போராட்டம் ஆவணங்களும் கட்டுரைகளும்

மனித சமூகம் பண்பாட்டு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்ந்து கொண்டே வந்தாலும் இந்தியாவின் தீரா நோயான சாதி மாறி வரும் சமூக மாற்றத்தின் ஊடே தன்னைப் பரிணமித்து நிலைத்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சாதி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய மைல்கல் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையைப் பெற்றுத் தந்தது. அதற்கு வழிகோலியது ஆலய நுழைவு போராட்டங்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் காந்தி போன்ற தலைவர்களால் முன்னேடுக்கபட்ட போராட்டங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு ‘கோவில் நுழைவு போராட்டம் ஆவணங்களும் கட்டுரைகளும் ‘. இதனை எஸ்.பூபதிராஜ் மற்றும் பா. அமுதரசன் ஆகியோர் தொகுத்துள்ளனர்.