பில்லி ஜீன் ஆண்கள் வலுவானவர்கள், வேகமானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஆண்களைவிட 8 மடங்கு குறைவாக பரிசுத்தொகை பெறுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “தனியாக ஒரு டென்னிஸ் தொடரை நடத்திக்காட்டுவேன்” என்று சவால் விட்டார்.
1971ம் ஆண்டு வர்ஜீனியா ஸ்லிம்ஸ் சர்க்யூட் (Virginia Slims Circuit) என்ற தொடரை சம ஊதியம் கோரும் பெண்களுக்காக அவர் நடத்தினார். தோட்டாக்களோ, பீரங்கிகளோ இல்லாமல், டென்னிஸ் ராக்கெட்டும் பந்தும் கொண்டு மைதானத்தில் வெடித்தது அவரது புரட்சி.
அதன் விளைவாக, பில்லி ஜீன் கிங் மற்றும் அவருடன் விளையாட சம்மதித்த 8 பெண்கள் நாட்டிலேயே முதன்மையான யுனைடெட் ஸ்டேட்ஸ் லான் டென்னிஸ் சங்கத்திலிருந்து (USTA – United States Lawn Tennis Association) நீக்கப்பட்டனர். இந்த பெண்கள் “Original 9” என அழைக்கப்பட்டனர்.
அந்தக் காலத்தில் USTA பெண்கள் தொடருக்கு கொடுத்த பரிசுத்தொகை 1,500 டாலர்கள்; ஆண்கள் தொடருக்கோ 12,000 டாலர்கள். ஆனால் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் சர்க்யூட் போட்டிகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 7,500 டாலர்கள். இதுவே பில்லி ஜீன் கிங் அடைந்த முதல் வெற்றி.

Battle of the Sexes
55 வயதான பாபி ரிக்ஸ், ஆண்கள்தான் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டியவர்கள், எதிலும் சிறந்தவர்கள் என நம்பினார். அவர் ஒரு முன்னாள் சாம்பியன்; உலகிலேயே சிறந்த வீரராக இருந்தவர்.
சிங்கிள்ஸ், டபிள்ஸ், மிக்ஸ்ட் டபிள்ஸ் என எல்லா பிரிவுகளிலும் 3 முறை விம்பிள்டன் கோப்பையும், 6 முறை அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையும், ஃப்ரென்ச் ஓபன் உள்ளிட்ட பல பட்டங்களையும் வென்றிருக்கிறார்.
பொழுதுபோக்காக, சூதாட்டம் போல டென்னிஸ் விளையாடி வந்தார். பெண்கள் தனித்தொடர் நடத்துவதும், நியாயமான பரிசுத்தொகையும், சம மரியாதையும் கேட்பதும் நாடுமுழுவதும் பேச்சுப்பொருளாக இருந்தபோது, தன்னால் எந்த பெண்ணையும் வெல்ல முடியும் என அறிவித்தார்.
ஊடகங்களில், பெண்கள் படுக்கையறையிலும் சமையலறையிலும் மட்டுமே சிறப்பானவர்கள் எனக் கூறினார். எனினும், இவரது சவாலை பில்லி ஜீன் ஏற்கவில்லை.