Aus v Ind : 'குழப்பமான அணித்தேர்வு; திணறவைத்த பிங்க் பந்து' – இந்தியாவின் தோல்விக்கான 3 காரணங்கள்!

Share

பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடந்த அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கமாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

India

அடிலெய்டில் பிங்க் பந்து டெஸ்ட் என்பது இந்திய ரசிகர்களின் நினைவில் பதிந்திருக்கும் கொடுங்கனவு. இதே அடிலெய்டில் பிங்க் பந்து டெஸ்ட்டில்தான் இந்தியா கடந்த முறை 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்த முறை அந்த மாதிரி பேரழிவான ஆட்டத்தை ஆடவில்லையென்றாலும், இந்த முறையும் இந்தியா அடைந்திருப்பது மிக மோசமான தோல்விதான். வெறும் இரண்டரை நாட்களில் சவாலே அளிக்காமல் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியை இழந்திருக்கிறது. இந்தியாவின் தோல்விக்கான சில காரணங்கள் இங்கே.

அணித்தேர்வு :

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஷ்வின்தான் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். ஆனால், பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் அஷ்வினை பென்ச்சில் வைத்துவிட்டு வாஷிங்டன் சுந்தரை லெவனில் எடுத்திருந்தார்கள். அவரும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடிய நிதானமான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கும் உதவியிருந்தது. ஆனால், அவரை அடிலெய்டு பகலிரவு டெஸ்ட்டில் லெவனில் எடுக்கவில்லை. அஷ்வினின் ரெக்கார்டுகள் மிகச்சிறப்பாக இருக்கலாம். ஆனால், இப்போதைய சூழலில் அவரை விட வாஷிங்டன் சுந்தர் தானே சிறப்பாக ஆடி வருகிறார்? எனில் எதனடிப்படையில் வாஷிக்கு பதில் அஷ்வினை லெவனில் எடுத்தார்கள் என்பது புரியவில்லை.

Rohit

எப்போதுமே அணித்தேர்வில் ஒரு சீரான தன்மை இருக்க வேண்டும். ஓரு வீரரின் சேர்த்தலுக்கு விலக்கலுக்கும் பின் ஏதுவான காரணங்கள் இருக்க வேண்டும். கம்பீரின் வருகைக்குப் பிறகு இந்த விஷயத்தில் இந்தியா தடுமாறுவதாகவே தெரிகிறது. ஒயிட் வாஷ் ஆன நியூசிலாந்து தொடரின் மூன்றாவது போட்டியில் இப்படித்தான் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து பென்ச்சில் அமர வைத்திருந்தார்கள். இந்திய அணியின் தேர்வுக்குழுவே அந்த முடிவில் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் இந்த டெஸ்ட்டில் ஆடியிருந்தால் இக்கட்டான கட்டத்தில் பேட்டிங்கில் இந்தியாவுக்கு உதவிகரமாக இருந்திருப்பார். இனியாவது அணித்தேர்வில் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

பேட்டிங் சொதப்பல்:

வெறுமென பந்துவீச்சு பலத்தை மட்டுமே வைத்து எல்லா போட்டிகளையும் வெல்ல முடியாது என்பதற்கு இந்தப் போட்டி மிகச்சிறந்த உதாரணம். பும்ரா & கோ சிறப்பாக வீசினால் மட்டுமே போதாது. அவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் பேட்டர்களும் ஸ்கோர் போர்டில் கொஞ்சமாவது ரன்களை சேர்க்க வேண்டும். இந்திய பேட்டர்கள் யாருமே அரைசதத்தை கூட அடிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் யாருமே 100 பந்துகளுக்கு மேல் நின்று ஆடவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் யாருமே 50 பந்துகளுக்கு மேல் சந்தித்திருக்கவில்லை.

Rohit & Kohli

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பே 69 தான். கில்லும் ராகுலும் முதல் இன்னிங்ஸில் எடுத்தார்கள். வேறு எந்த கூட்டணியுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆடவில்லை. ரோஹித்தின் ஆர்டரை மாற்றியது வேலைக்கு ஆகவில்லை. பெர்த்தில் அழுத்தமே இல்லாத சூழலில் வந்து சதமடித்த கோலியால் இக்கட்டான சூழலில் அணிக்கு தேவைப்பட்ட போது அடிலெய்டில் தேவையான பங்களிப்பை அளிக்க முடியவில்லை. ரிஷப் பண்ட் ஆடும் சாகச இன்னிங்ஸ்கள் மட்டும் ஒரு போட்டியை வெல்ல போதவே போதாது.

மீண்டெழுந்த ஆஸ்திரேலியா:

முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்குக்கு சவால் விட்டிருந்தார். இந்த அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலை ஸ்டார்க் வீழ்த்தினார். இது ஒரு ‘Metaphor’ போல இருந்தது. முதல் டெஸ்ட்டில் ஆதிக்கமாக ஆடிய இந்திய அணியை வேடிக்கை பார்த்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் பந்திலிருந்தே இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா தோற்றவுடன் அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அணியில் முக்கிய வீரர்களின் இடம் சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டது.

Starc

உச்சக்கட்டமாக ஆஸ்திரேலியா அணியின் வீரர்களுக்குள்ளாகவே பிளவு ஏற்பட்டிருப்பதாக பேசப்பட்டது. ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் கம்மின்ஸிடம் இது சார்ந்த கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தது. பெரும் அழுத்தமான சூழலில்தான் ஆஸ்திரேலிய அணி அடிலெய்டில் களமிறங்கியது. வெற்றியின் மூலம் தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் பதில் கூறியிருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com