ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது
8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் குரூப் A-யிலும், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் குரூப் B-யிலும் இடம்பெற்றிருக்கின்றன.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில், இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்திய பிளேயிங் லெவனில், அபிஷேக் ஷர்மா, கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்தனர்.
பின்னர், பேட்டிங் இறங்கி 26 ரன்களில் பும்ராவிடம் தங்களின் முதல் விக்கெட்டை இழந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி, அடுத்த 31 ரன்களுக்கு மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது.
13.1 ஓவரில் 57 ரன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.